ஐ.நா. அறிக்கை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதாக அரசு அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளைக் குறித்துக்கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் பதவியேற்ற புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறிப்பாக, மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை, நல்லிணக்கம், நிறுவன மற்றும் சட்டமறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களில் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆணையாளர் வழங்கியிருக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சியளிப்பதுடன், ஊக்குவிப்பாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
யுத்தத்துக்குப் பின்னரான விடயங்களில் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆணையாளர் வரவேற்றிருப்பதைப் பாராட்டுவதாகவும், 2015ஆம் ஆண்டு இரண்டு தடவைகள் நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய கடந்தகால சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்துவதற் கான நடவடிக்கைகளில் உறுதியாக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளது.
நிலைத்திருக்கக் கூடிய சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை எட்டுவதற்காக சகல பங்குதாரர்கள், சர்வதேசம், சிவில் சமூகம், பாதிக்கப்பட்டவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதுடன் பரந்தளவிலான ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதிசெய்வதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான ஐ.நாவின் அறிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்ளும் அதேநேரம், இந்த அறிக்கை மனித உரிமை விசாரணைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறதே தவிர இது குற்றவியல் விசாரணை அல்ல என்பதை அடையாளம் கண்டுகொண்டுள்ளோம்.
புதிய பொறிமுறை உள்ளிட்ட பரிந்துரைகள் மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து உரிய அதிகாரிக ளூடாகவே முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள சகல மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு நாம் ஐ.நாவுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படத் தயாராகவிருக்கின்றோம் என வெளிவிவகார அமைச்சு தனது பதிலலில் குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply