பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 42 பேர் சாவு
பாகிஸ்தானில் விமானப்படை தளம் மீது தலிபான்கள் இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் படாபர் விமானப்படை தளம் உள்ளது. இப்பகுதிக்கு செல்லும் பாதைகளில் இன்று வழக்கம்போல் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவ உடை அணிந்து வந்த 13 தீவிரவாதிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இரண்டு பாதைகள் வழியாக நுழைந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
கையெறி குண்டுகள், மோர்ட்டார் குண்டுகள் மற்றும் ஏ.கே.௪7 ரக துப்பாக்கிகளால் பாதுகாப்பு படை வீரர்களை கண்மூடித்தனமாக தாக்கிய தீவிரவாதிகள், விமானப்படை தள வளாகத்தில் உள்ள மசூதிக்குள் சென்று தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். தகவல் அறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்தனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ கேப்டன், விமானப்படை பொறியாளர்கள் உள்பட 29 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 13 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 8 வீரர்கள் உள்பட 22 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் தற்கொலைப் படை பிரிவு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து விமானப்படை தளத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில தீவிரவாதிகள் அப்பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply