கலப்பு மற்றும் உள்ளக பொறிமுறை மூலம் விசாரணை வேண்டும்: ஆனந்தசங்கரி
யுத்தக் குற்றங்கள் கலப்பு நீதிமன்றத்தாலும் உள்ளக பொறிமுறை மூலமும் பகுதி பகுதியாக விசாரணை செய்யப்படவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமை பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதானது ‘ நம்மவர்களும் புலம்பெயர்ந்த மக்களும் மிக முக்கியமாக கருதவேண்டிய விடயத்தை துரதிஸ்டவசமாக அனைவரும் மிகச்சாதாரணமாக எடைபோடுகின்றனர்.
இதனுடைய கடும் விளைவுகளைப்பற்றி உணராமல் பல கோணத்தில் இருந்து பலரால் பலவிதமான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில் சர்வதேச கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்றுக்கொண்டாலும், இந்த நீதிமன்றங்கள் எத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்கப் போகின்றது என்பதை ஆராயும் போது, பாதிக்கப்பட்டவர்களின் நன்மையை கவனத்தில் எடுத்துப் பார்த்து, சில குற்றச் செயல்களை சர்வதேச கலப்பு நீதிமன்றத்தில் விசாரிப்பது வசதிப்படாது என்றும் அதேபோல் எல்லாக் குற்றங்களையும் உள்ளக நீதிமன்றத்தில் விசாரிப்பது கஸ்டம் எனவும் உணரக் கூடியதாக இருக்கின்றது.
மிக மோசமான குற்றங்களும், அடிப்படை உரிமை மீறல்களையும் மூன்று நான்கு வகையாகப் பிரிக்கலாம் அவையாவன வன்புணர்வோடு கூடிய சித்திரவதை, வன்புணர்வு, சித்திரவதையோடு கூடிய கொலை, சித்திரவதையோடு கூடிய கொலை மற்றும் காணாமல் போனதுடனான சித்திரவதையோடு சேர்ந்த கொலை ஆகியவையாகும். இதை இராணுவம் காவல்துறையினர் சம்மந்தப்பட்டவை என மேலும் பிரிக்கலாம். வன்புணர்வோடு கூடிய சித்திரவதைகளுக்குள்ளான எமது பெண்களை நீதிமன்றம் வந்து பகிரங்கமாக சாடசியமளிக்க வைப்பது கஸ்டம் மட்டுமல்ல ஒரு முடியாத காரியமும்கூட என்பதை அனைவரும் அறிவர். அனேகமாக வன்புணர்வுகள் சித்தரவதையுடன் சேர்ந்தவையாக இருப்பதால் இதனை அனுபவமிக்க பெண் நீதிபதிகள், பெண் சட்டத்தரணிகள் ஆகியோரைக் கொண்டு சிறு குழுக்களை அமைத்து வேறு எவரையும் அனுமதிக்காது இரகசிய விசாரணைகளை மேற் கொண்டு பொருத்தமான தீர்வையும் நட்டஈட்டையும் வழங்கவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகின்றது.
சித்திரவதையால் ஏற்பட்ட கொலைகளை கலப்பு நீதிமன்றங்களே விசாரிக்க வேண்டும்.சித்திரவதைகள் மட்டும் உள்ளவற்றை உள்ளக விசாரனை முறைமையில் விசாரிக்கலாம். மரண தண்டனை தீர்வாக வரவேண்டிய குற்றங்களை கலப்பு நீதிமன்றம் மூலமே விசாரிக்கப்பட வேண்டும்.
கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாத நிலை ஏற்பட்டால், பாதிக்கப் பட்டவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் சட்ட வல்லுனர்களை உள்ளடக்கிய சிறு குழுக்களை பார்வையாளர்களாக அமர்த்தலாம். மேலும் சில விசாரணைகளுக்குரிய வழக்குகளுக்கு போதிய சட்டங்கள் இல்லாத பட்சத்தில், எமது சட்டங்களுக்கு வேண்டிய வலுவூட்டக் கூடிய புதிய சட்டங்களை உருவாக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் உரிய நட்ட ஈடு சிபாரிசு செய்யப்பட வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு அவர்களின் இருப்பிடம் தெரியாத பட்சத்தில் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் அங்கவீனர்களாக இருந்தாலோ, அல்லது கடும் நோய்வாய்ப் பட்டிருந்தாலோ, அல்லது அவ்வாறு முறைப்பாடு செய்திருந்தாலோ அவர்களுக்கு சகலவிதத்திலும் உதவுவதோடு, அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சாதனங்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply