புனித ஹஜ் தொழுகைக்குத் தயாராகும் மெக்கா நகரம்

mecca_3மெக்கா மசூதியில் அடுத்த வாரம் ஹஜ் தொழுகைகள் தொடங்குவதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் வீரர்களை சவுதி அரேபியா அரசு பணியமர்த்தியுள்ளது. போக்குவரத்து, தீவிரவாத எதிர்ப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் அடுத்த வாரம் புனித தொழுகைகள் நடைபெறவிருக்கின்றன. இதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா நகருக்கு ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இந்த தொழுகையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் புனித பயணம் மேற்கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. இதையடுத்து, புனித பயணம் மேற்கொண்டுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சவுதி அரேபியா அரசு, ஒரு லட்சம் வீரர்களை பணியமர்த்தியுள்ளது. கார்களில் வருபவர்களிடம் அவர்களுடைய ஆவணங்களை முழுமையாகச் சோதித்த பின்னரே தொடர்ந்து பயணம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது.

 

பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் மன்சூர் அல்-டர்க்கி கூறுகையில்,”சவுதி அரேபியாவுக்கு எதிராக தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் ஏராளமான நபர்களைக் கைது செய்துள்ளனர். அதனால் நாங்கள் பாதுகாப்பில் முழுகவனம் செலுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

பாதுகாப்பு காரணங்களுக்காக புதிதாக காவல் கட்டுப்பாட்டு மையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து சிசிடிவி மூலம் பெரும்பாலான பகுதிகளை அதிகாரிகள் துல்லியமாகக் கண்காணித்து வருகின்றனர். அவசரகாலத் தொலைதொடர்பு உள்ளிட்ட பல்வேறு கருவிகளும், வசதிகளும் இம்மையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன.

 

மேலும் ராணுவ அதிகாரி வாலீது கூறுகையில், அனைத்து பகுதிகளும் இங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இதற்காக சுமார் 7 ஆயிரம் காமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, விமானங்கள் மூலமும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

மெக்கா நகருக்கு வரும் அனைத்து வழிகளிலும் இது போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. கடந்தாண்டு 30 லட்சம் பேர் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்ட நிலையில், பாதுகாப்பு மற்றும் விசா சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply