சவுதியில் ஆறுமாத தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் ஏமன் அதிபர் நாடு திரும்பினார்

eman presidentஹவுத்தி கிளர்ச்சியாளர்களுடனான உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்ததையடுத்து, சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்ற ஏமன் அதிபர் அபத் ரப்போ மன்சூர் ஹாதி, ஆறுமாத தலைமறைவு வாழ்க்கைக்கு பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார். ஏமன் நாட்டில் அதிபர் அபத் ரப்போ மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இது தீவிரமடைந்து உள்நாட்டுப் போராக மாறி பலரது உயிரை பலி வாங்கி வருகிறது. இந்த கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுத உதவி அளித்தது.

ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி, தலைநகர் சனாவிலிருந்து தலைமறைவானார். பின்னர் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்று அந்நாட்டில் தஞ்சம் அடைந்தார்.

தனது ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறு சவுதி அரேபியா அரசிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஹாதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதியில் இருந்து வான்வழி தாக்குதலை தொடங்கின. இதில் கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன், அவர்களின் முகாம்கள் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன.

போராளிகள் வசமிருந்த சனா, ஏடென் உள்ளிட்ட முக்கிய நகரங்களை அரசுப்படைகள் மீட்டன. இந்த உள்நாட்டுப் போரின் விளைவாக ஏமன் தலைநகரான சனா, துறைமுகப்பட்டினமான ஏடென் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குண்டுவீச்சில் இடிந்து தரைமட்டமாகி, மண்மேடாக காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில், ஆறு மாதகால தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு ஏமன் அதிபர் அபத் ரப்போ மன்சூர் ஹாதி நேற்று தனது தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளார். சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான விமானம் மூலம் அவர் ஏடென் நகரில் உள்ள விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் சனாவில் உள்ள அதிபர் மாளிகைக்கு செல்லவில்லை. எங்கே தங்கியுள்ளார்? என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், பாதுகாப்பான இடத்தில் அதிபர் பத் ரப்போ மன்சூர் ஹாதி தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிக்கு ஏமன் அரசு முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை சுமார் ஐயாயிரம் மக்கள் இருதரப்பு தாக்குதல்களில் பலியாகியுள்ளனர். பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply