சர்வதேச தலையீடற்ற, உள்ளக பொறிமுறையின் கீழ் விசாரணை
மூன்று விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணை நடத்தப்படும். எனவே சர்வதேச விசாரணை என்று சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இதில் எவ்வித உண்மைகளும் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பரணகம ஆணைக்குழுவை அமைத்து சர்வதேச சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்றவர் மஹிந்த ராஜபக்ஷவே ஆவார் என்றும் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகத்துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஐ.நா. தீர்மானத்திற்கு அமைய உள்ளகப் பொறிமுறையொன்று உருவாக்கப்படும்.அவ் உள்ளகப் பொறிமுறையில் மூன்று விசேடக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். காணாமல்போனோர் தொடர்பாக கண்டறியும் அலுவலகம், விசேட சட்ட அலுவலகம் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பன இந்தக் குழுக்களாகும்.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தில் கருணைச் சபை ஒன்றும் உருவாக்கப்படும். மகாநாயக்க தேரர்கள், இந்து மதத் தலைவர்கள், கிறிஸ்வத ஆயர் மார்கள், இஸ்லாமிய மதத் தலைவர்கள் உள்ளிட்ட நான்கு மதத் தலைவர்களும் அடங்கியதாக இக் குழு அமையும்.
காணாமல் போனோர் தொடர்பாக இக் குழுவுக்கு கிடைக்கும் முறைப்படுகள் ஆராயப்பட்டு தீர்வுகள் எட்டப்படும்.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படும். இது தொடர்பாக தென்னாபிரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.
அத்துடன் விசேட சட்டக் குழு அலுவலகம் ஒன்று ஏற்படுத்தப்படும். காலத்திற்க்கு காலம் சர்வதேச சட்ட வல்லுநர்களின் உதவி தேவைப்பட்டால் அதனை இக் குழுவினூடாக நாடுவோம்.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.இவ்வாறான தொரு சட்ட உதவி தேவைப்பட்டால் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்படும். இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் சட்டப் பொறிமுறையொன்றை தயாரிக்கப்பட்டு அதற்கு உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்படும்.
எனவே ஐ.நா. தீர்மானத்திற்கு அமைய உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணையே மேற்கொள்ளப்படவுள்ளதை தவிர இது சர்வதேச விசாரணை அல்ல.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தனது ஆட்சிக் காலத்தில் பரணகம ஆணைக்குழுவை நியமித்து அதற்கு வெளிநாட்டு சட்ட வல்லுணர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டார் என்றார்.
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன
அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த சந்திப்பில் தகவல் வெளியிடுகையில்,
வெளிநாட்டு சட்ட ஆலோசணைகள் பெறப்பட வேண்டுமென்றோ, வெளிநாட்டு ஆலோசகர்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள் அவசியமென்றோ ஐ.நா. அறிக்கையில் வலியுறுத்தப்படவில்லை. தேவைப்பட்டால் ஒத்துழைப்பை நாடலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
எனவே இவர்கள் பெரும்பாலும் கண்கானிப்பாளர்களாகவே செயற்படுவார்களே தவிர விசாரணைகளில் தலையிட மாட்டார்கள்.ஆனால் தயான் ஜெயதிலக்க போன்ற பலர் சர்வதேச விசாரணையே நடைபெறப்போகின்றது என நாட்டுக்குள் பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர் என்றார்.இச் சந்திப்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி.சில்வாவும் கலந்து கொண்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply