அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை: வைகோ உள்பட 1000 பேர் கைது

vaikoஇலங்கை தமிழர் படுகொலையில் நீதியை அழிக்க உள்நாட்டு விசாரணை என துரோகம் செய்யும் அமெரிக்காவை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை போராட்டம் நடந்தது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ம.தி.மு.க., மே 17 இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இந்த போராட்டத்துக்கு வைகோ தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கோவை ராமகிருஷ்ணன், சத்திரியன் வேணுகோபால், மணிமாறன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

அங்கிருந்து முற்றுகை போராட்டத்துக்கு சென்ற வைகோ உள்பட அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இந்த போராட்டம் குறித்து வைகோ கூறியதாவது:–

இலங்கையில் 2009–ல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம்.

உள்நாட்டு விசாரணையே போதும் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த போராட்டத்தின் மூலம் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொண்டு சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் தீர்மானமாக கொண்டு வந்ததை அமுல்படுத்த வேண்டும். சர்வதேச நாடுகளும் இலங்கை இனப்படுகொலை விசாரணைக்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply