இலங்கையில் முல்லைத்தீவிலேயே மிக மோசமான வறுமை

mullaiஐநா மன்றம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையொன்றில் இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மிக மோசமான வறுமை நிலவுகின்றது என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஓப்பீட்டளவில், கொழும்பு மாவட்டத்தில் ஒன்று புள்ளி நான்கு வீதமானவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 30 வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இதேவேளை முல்லைத்தீவைப் போன்று யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகிய கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 13 வீதமானவர்கள் வறுமையில் வாடுவதாக அந்த அறிக்கை கூறுகின்றது.

யுத்த மோதல்கள் முடிவுககு வந்து ஆறு வருடங்களுக்கு மேலாகின்றது. இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இருந்த போதிலும், யுத்த மோதல்களின்போது பொதுமக்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட முழுமையான அழிவு, அங்கு ஏற்பட்ட மோசமான உயிரிழப்புக்கள், படுகாயமடைந்த பலர் அவயவங்களை இழந்துள்ளமை என்பன முல்லைத்தீவு மாவட்டத்தின் இந்த நிலைமைக்கு அடிப்படைக் காரணம் என வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகிய சாந்தி சிறிஸ்கந்தராசா கூறுகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிடல் அதிகாரியாகப் பணியாற்றி, அந்த மாவட்டத்தை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தின் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக அவர் நியமனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் அங்குள்ள மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்வாதார உதவிகள் நிலையான வருமானத்தை ஈட்டித்தரத்தக்கவையாக இல்லாமலிருப்பது இந்த மாவட்டத்தின் வறுமை நிலைக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய உற்பத்திகளாகிய பால், நெல், கடலுணவு என்பவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு உற்பத்திகளை அதிகரிக்காமல், அவற்றை அப்படியே வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதும் அங்குள்ள மக்களைப் பொருளாதார ரீதியாகப் பாதித்திருக்கின்றது என்று அவர் கருதுகின்றார்.

அதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் யுத்த காலத்திலும் அதற்கு முன்னரும் இயங்கி வந்த ஓட்டுத்தொழிற்சாலை இன்னும் செயலிழந்திருக்கின்றது. அது புனரமைக்கப்பட்டு ஓடுகள் உற்பத்தி செய்யப்படுமானால் பலர் அங்கு வேலை வாய்ப்பைப் பெற்றிருப்பார்கள். மீள்குடியேற்றத்தின் பின்னர் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் கூரைக்கான ஓடுகளை அந்த மாவட்டத்திலேயே மக்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடியதக இந்திருக்கும்.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தமது கடலில் சுதந்திரமாகத் தொழில் செய்ய முடியாதிருப்பது, வேறு தொழில்துறைகள் அங்கு வளர்ச்சி பெறாதிருப்பது என்பனவும், அந்த மாவட்டம் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பதற்கான காரணம் என சாந்தி ஸ்கந்தராசா தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் இந்தக் குறைகளைப் போக்குவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply