இராணுவ நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது: கோதபாய

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக்கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் மூலம் கிடைத்த உதவிகளைக் கொண்டு வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவு இராணுவத்தினருக்கு வழங்கிய மருந்துப் பொருள் உதவிகளைப் பெற்றுக்கொண்ட பின்னரே கோதபாய இவ்வாறு கூறினார்.

இலங்கை இராணுவத்தினருக்கு வழங்குவதற்காக 4 மில்லியன் ரூபா செலவில் கால்களுக்குப் பயனப்படுத்தும் மருந்துப் பொருள்கள் வழங்கப்பட்டன. அநுராதபுரம், பொலனறுவ மற்றும் யால பகுதிகளை உள்ளடக்கியதாக ஈழத்தை உருவாக்கும் கனவிலேயே விடுதலைப் புலிகள் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், புலிகளிடமிருந்து மீட்ட இலங்கைப் படத்தைக் கொண்டே இதனைத் தாம் அறிந்து கொண்டதாகக் கூறினார்.

நாட்டை முழுமையாக அழிக்கும் நோக்கில் விடுதலைப் புலிகள் கடந்த 30 வருடங்களாக பெருமளவு ஆயுதங்களை வாங்கிவைத்திருந்தார்கள் என்பது அவர்களிடமிருந்து மீட்ட ஆயுதங்களின் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருக்கும் பொதுமக்களை விடுதலைப் புலிகள் வெளியேற அனுமதிக்க வேண்டுமன ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வேண்டுகோள் விடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம கூறியிருந்தார்.

“தோற்றுப்போகும் நிலையிலேயே விடுதலைப் புலிகள் உள்ளனர். ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஜனநாயகப் பாதையில் இணைவதே அவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு மாற்றுவழி” என அவர் குறிப்பிட்டார்.

இதுஇவ்விதமிருக்க, மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து உடனடியாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply