மரண தண்டனையை ஒழிக்க மத்திய அரசு மறுப்பு: சட்ட ஆணையத்தின் பரிந்துரையை நிராகரிக்கிறது
உலகின் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியாவிலும் மரண தண்டனையை கைவிட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பான ஒரு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மரண தண்டனையை ஒழிப்பது பற்றிய பிரச்சினையை ஆய்வு செய்யுமாறு சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டது.
அதையடுத்து, 9 பேர் கொண்ட சட்ட ஆணைய குழு அமைக்கப்பட்டது. அக்குழு, தீவிரவாதம் தொடர்பான வழக்குகளைத் தவிர, இதர வழக்குகளில் மரண தண்டனையை கைவிடலாம் என்று பெரும்பான்மை அடிப்படையில் சிபாரிசு செய்தது. குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேர், மரண தண்டனை நீடிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இருப்பினும், பெரும்பான்மை உறுப்பினர்கள், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றே கூறியிருந்தனர். இந்த சிபாரிசு அறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் நகல், சுப்ரீம் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சட்ட ஆணையத்தின் சிபாரிசு அறிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான ஆலோசனை நடத்தியது.
மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி மற்றும் உயர் அதிகாரிகள் அதில் பங்கேற்றனர். அதில், சட்ட ஆணையத்தின் சிபாரிசை நிராகரிப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் சட்ட ஆணையத்தின் சிபாரிசு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. மத்திய சட்ட அமைச்சகத்துடனும் ஆலோசனை நடந்து வருகிறது. இந்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும்.
சட்ட ஆணையத்தின் சிபாரிசு நிராகரிக்கப்படுவதற்கே வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், நாட்டுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் இருப்பதால், மரண தண்டனையை ஒழிப்பதற்கான காலம் கனியவில்லை என்று பெரும்பாலான அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply