147 பயணிகளுடன் நடுவானில் பறக்கும் போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பைலட் திடீர் மரணம்
விமானத்தில் நடுவானில் பறக்கும்போது பயணிகளுக்கு திடீரென மாரடைப்பு போன்ற அவசர ஆபத்து நிகழ்ந்தால், விமானியிடம் கூறி அருகாமையில் உள்ள விமான நிலையங்களில் அவசரமாக தரையிறக்கி அந்நபருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதுண்டு. ஆனால், அந்த விமானத்தை ஓட்டும் விமானியே தனது இருக்கையில் பிணமாக கிடந்தால்..,? இப்படியொரு திகில் அனுபவம் அமெரிக்காவின் பீனிக்ஸ் – பாஸ்டன் நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் 320 ரக விமானத்தில் நேற்று சென்ற பயணிகளுக்கு ஏற்பட்டது.
தடம் எண் 550 என்ற அடையாளத்துடன் அந்த விமானம் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியான பீனிக்ஸ் நகரில் இருந்து வடகிழக்கு பகுதியான பாஸ்டன் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் 147 பயணிகளும் ஐந்து சிப்பந்திகளும் இருந்தனர்.
சுமார் 3700 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பயணத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானி தனது இருக்கையில் சுருண்டு விழுந்ததை கண்டு அருகாமையில் அமர்ந்திருந்த சகவிமானி திடுக்கிட்டார். உடனடியாக, விமானத்தில் இருந்த ஒரு செவிலியரின் துணையுடன் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டார். எனினும், சில நொடிகளுக்குள் மூத்த விமானியின் உயிர் பிரிந்து விட்டது.
நிலைமையை வெகு சாதுர்யமாக கையாண்ட சகவிமானி, அந்த விமானத்தின் இயக்கத்தை தனது முழுகட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அருகாமையில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். நிலைமையை விளக்கிக்கூறி, அவசரமாக அந்த விமானம் தரையிறங்க அனுமதி கோரினார்.
இதையடுத்து, நியூயார்க் மாநிலம், ஓனோன்டகா கவுன்ட்டியில் உள்ள சிராகஸ் நகர விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. தயாராக காத்திருந்த மருத்துவக் குழுவினர், இறந்து கிடந்த விமானியின் பிரேதத்தை வெளியேற்றி பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சுமார் ஐந்து மணிநேர தாமதத்துக்கு பின்னர் அந்த விமானம் பாஸ்டன் நகரை சென்றடைந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply