துருக்கி வான்பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள்: துருக்கி மற்றும் நேட்டோ கடும் கண்டனம்
துருக்கி வான்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் பறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என துருக்கி மற்றும் நேட்டோ நாடுகள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை அன்று சிரியாவுடனான எல்லை அருகில் துருக்கியின் வான் பரப்பில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக துருக்கி தெரிவித்துள்ளது. மேலும் துருக்கிய வெளியுறவு மந்திரி பெரீதுன் சினிர்லியோக்லு ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கெய் லவ்ரொவ்வை தொடர்புக்கொண்டு தனது வலுவான எதிர்ப்பைப் பதிவுசெய்ததோடு, ‘இனிமேல் இப்படியான அத்துமீறல்கள் நடந்தால் அதற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டிவரும்’ என்று எச்சரித்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி நேட்டோ உறுப்பு நாடுகளுடனும் அவர் விவாதித்துள்ளார். கடந்த 1949ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேட்டோ நாடுகளின் அமைப்பில் 28 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதனிடையே நேட்டோ நாடுகளின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் துருக்கி வான்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் நுழைவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் அசாத் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். குழு மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. அதிபர் அசாத் எதிர்த்து போராடும் கிளர்ச்சி படையினருக்கு நேட்டோ நாடுகள் ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply