பாயும் படுக்கையுமாகிவிட்ட நோயாளிகளுக்கு தொண்டு செய்யும் தமிழ்ப் பெண்ணுக்கு விருது வழங்கி சிங்கப்பூரில் கவுரவம்
சிங்கப்பூரில் நடமாட முடியாமல் பாயும் படுக்கையுமாகிவிட்ட நோயாளிகளுக்கு தொண்டு செய்த தமிழ்ப் பெண்ணான ஈஸ்வரி செல்லப்பாவுக்கு ஆசிய பெண்கள் நலவாழ்வு சங்கத்தின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் ஈஸ்வரி. 12 வயது சிறுமியாக இருந்தபோதே இவரது தந்தை இறந்து விட்டார். இதையடுத்து, தனது 14-வது வயதில் சென்னையில் உள்ள அன்னை தெரசா தொண்டு இல்லத்தில் சமூகச்சேவகியாக தொண்டாற்றிவந்த ஈஸ்வரி கடந்த 1986 ஆண்டு சிங்கப்பூர் நாட்டுக்கு வந்தார். இங்குள்ள சுவாமி ஹோம் என்ற தொண்டு இல்லத்தில் சமூகச்சேவகியாக பணியாற்றிவரும் இவர், கைகால்கள் செயலிழந்த நிலையில் நடமாட முடியாமல் இருக்கும் கலைச்செல்வி(53) என்ற பெண்மணியை சுமார் நான்காண்டு காலமாக அக்கறையுடன் கவனித்து வருகிறார்.
சுமார் 76 கிலோ எடையுள்ள கலைச்செல்வியை கட்டிலில் இருந்து தூக்கி, தள்ளுவண்டியில் அமரவைத்து, காலைக்கடன்கள் மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்கவைக்க உதவுவது, அவருடைய மனம்கோணாத வகையில் உணவு, மருந்து, மாத்திரைகளை வேளாவேளைக்கு தந்து பராமரிப்பது உள்ளிட்ட வேலைகளை ஈஸ்வரி சற்றும் சலிக்காமல் செய்து வந்துள்ளார்.
இவரது தொண்டுள்ளம் பற்றி அறியவந்த ஆசிய பெண்கள் நலவாழ்வு சங்கம், ”தொண்டுள்ளத்துடன் கூடிய பணிப்பெண்ணின் முன்மாதிரி” என்ற விருதினை ஈஸ்வரிக்கு வழங்கி கவுரவித்துள்ளது.
பிறருக்கு கொடுக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கம். என்னால், மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதை பார்ப்பதற்கு இணையான ஆனந்தம் எதுவுமே இல்லை என கூறும் ஈஸ்வரி, ஐந்தாண்டுகளுக்கு பின்னர் நாளை சென்னை செல்ல திட்டமிட்டுள்ளார்.
அங்கு இதயம்சார்ந்த பாதிப்புகளால் நோயுற்றிருக்கும் தனது தாய்க்கு ஆதரவாக ஒரு மாதம் தங்கியிருந்து, அவருக்கு பணிவிடை செய்த பின்னர், மீண்டும் சிங்கப்பூரில் உள்ள தொண்டு இல்லத்துக்கு திரும்பப் போவதாக ஈஸ்வரி செல்லப்பா(47) தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply