கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் முல்லைத்தீவு மாணவி தீகுளித்து தற்கொலை

கிழக்கு பல்கலைக் கழகத்தில் மற்றுமொரு முல்லைத்தீவு மாணவி தீக்குளித்து தற்கொலை புரிந்துள்ளார் மட்டக்களப்பு வந்தாறுமூலை வாளாக பெண்கள் விடுதி குளியலறையில் இன்று காலை 10.00 மணியளவில் இம்மாணவி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ரவீந்திரன் சுதர்சனா என்ற கலைப்பிரிவு மூன்றாம் வருட மாணவியே இவ்வாறு தற்கொலை புரிந்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளது. இவரது தாய் இவருடன் சமீப காலமாகத் தங்கியுள்ள போதிலும் ஏனைய குடும்ப உறவுகளைப்பற்றி இம்மாணவி அதிக கவலையுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
யாழ்பாணம் மானிப்பாயில் பிறந்த இவர் பின்னர் மற்றைய குடும்ப உறவுகளுடன் முல்லைத்தீவில் வசித்துவந்துள்ளார்.
 
இம்மாணவி தனது 7ம் இலக்க விடுதியிலிருந்து குளியலறைக்குச் சென்று சற்றுநேரத்தில் அவ்வறையிலிருந்து புகைவெளிவரத் தொடங்கியதை அவதானித்த விடுதி மாணவிகள் ஓடிச்சென்று கதவை உடைத்து மாணவியை தூக்கிக் கொண்டு சென்று செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.  முற்பகல் 10.30 அளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. பிரேதம் அவ்வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
 
மாணவியின் உடலில் பெரும்பாலான பகுதி தீயில் கருகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை விடுதியில் கடந்த மாதம் முல்லைத்தீவைச் சேர்ந்த முதலாம் வருட மாணவி மற்றும் மணிகள் விடுதி உதவி மேற்பார்வையாளர் ஆகியோர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றன. 

இதேவேளை இந்த சம்பவத்தை நேரில் கண்ட 4 மாணவிகள் மயக்கமுற்று ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply