புலிகளை விடுவித்து நாட்டில் யுத்தம் நடந்த வரலாற்றையே மாற்றிவிட முயற்சி :அமைச்சர் சம்பிக்க ரணவக்க
புலிகளை விடுவித்து நாட்டில் யுத்தம் நடந்த வரலாற்றையே மாற்றிவிட சிலர் முயற்சிக்கின்றனர். புலிகளுக்கு மன்னிப்பு வழங்க வலியுறுத்துவோர் இராணுவத்தை தண்டிக்க முயற்சிக்கின்றனர் அதனாலேயே அமைச்சரவையில் சிறையில் உள்ள புலிச்சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு எதிர்ப்பை தெரிவித்தேன் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார். கைது செய்யப்பட்டு தடுப்பில் வைத்துள்ள இந்த கைதிகளை விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்படும் அரசாங்கத்தின் முயற்சிகளை நான் விரும்பவில்லை. இதற்கு எனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக்கோரி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பித்த பிரேரணைக்கு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. யுத்த காலகட்டத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் அரசியல் கைதிகள் அல்ல. அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களை நியாயப்படுத்த ஒருசிலர் முயற்சிக்கின்றனர். அவ்வாறு இருக்கையில் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் முயற்சிப்பது வருத்தமளிக்கும் விடயமாகும். கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைத்துள்ள இந்த கைதிகளை விடுவிப்பது தொடர்பில் எடுக்கும் முயற்சியை நாம் விரும்பவில்லை. இதற்கு எனது கடுமையான எதிர்ப்பை தெரிவிகின்றேன்.
மேலும் இவர்களை விடுவிப்பது நாட்டில் மூன்று தசாப்பத காலம் நடைபெற்ற யுத்தத்தை மறக்கடிக்கச் செய்யும் வகையில் அமையும். இந்த நாட்டில் ஆயுதம் ஏந்தி போராடிய பயங்கரவாதிகளின் நாசகார செயற்பாடுகள் மூடிமறைக்கப்பட்டுவிடும். அதற்கான நடவடிக்கைகளை நாமே ஏற்படுத்திவிடக்கூடாது.
அதேபோல் புலிகளை விடுவிக்கவும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவும் வலியுறுத்துபவர்கள் மாறாக இராணுவத்தை மாத்திரம் தண்டிக்கும் வகையில் செயற்படுவது ஏன். இராணுவம் போர்க்குற்றம் புரிந்துள்ளதாக சர்வதேச மட்டத்தில் முறைப்பாடிடும் இவர்கள் தமது தரப்பு செய்த தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். சர்வதேச நீதிமன்றில் இராணுவத்தை குற்றவாளியாக்கி அவர்களை தண்டிக்க எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாகவே இந்த புலிகளின் விடுதலையும் அமைந்துள்ளது. புலிகளை நியாயப்படுத்தி இராணுவத்தை குற்றவாளியாக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விடுதலைப் புலிகளை விடுவித்து அவர்களை நியாயப்படுத்தும் தமிழர் தரப்பினர் மாறாக இராணுவத்தின் மீதும் குற்றம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வார்களா. அவர்களை நியாயப்படுத்தும் எமது கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வார்களா? புலிப் பயங்கரவாதிகளுக்கு நியாயம் கேட்பதைப் போலவே நாம் இந்த நாட்டின் இராணுவத்திற்காக நியாயம் கேட்கின்றோம். ஆனால் புலிகளை மட்டும் நியாயபடுத்தி இராணுவத்தின் மீது போர்க்குற்றவாளிகள் என்ற முத்திரை பொறிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. அதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க அமைச் சரவையில் கொண்டுவந்த தீர்மானத்தை நான் எதிர்க்கவும் இதுவே காரணமாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு புலிகளை விடுவிக்கும் பிரச்சினை வேறு. இந்த சிக்கலை சட்ட ரீதியில் கையாள வேண்டும். யாருடைய தனிப்பட தேவைக் காகவும் சட்டத்தை மாற்றியமைக்க கூடாது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply