இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு: டெல்லியில் இன்று தொடங்குகிறது
இந்தியா-ஆப்பிரிக்கா நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய அமைப்பின் 3-வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது. இந்த மாநாட்டில் முக்கியமாக பருவநிலை மாற்றம் பற்றி விவாதிக்கப்படுகிறது. இன்று முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது.இதில் 54 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். மந்திரிகள், உயர் அதிகாரிகள் கூட்டம் இன்று நடக்கிறது. எரிசக்திக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத தூய்மையான சூரியசக்தியை பயன்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதன்மூலம் பருவநிலை மாற்றத்தை குறைப்பதுடன், வளர்ச்சியையும் அடைய முடியும்.
மாநாட்டையொட்டி டெல்லியில் சூரியசக்தி மின்சார உற்பத்தி தொடர்பான ஒரு கண்காட்சியும் இந்தியா சார்பில் நடத்தப்பட உள்ளது. இதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பதும் விளக்கப்படும்.
அதுமட்டுமின்றி வளரும் நாடுகளுக்கிடையே இதுதொடர்பான தொழில்நுட்ப கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்காக ஒரு சிறப்பு நிதியையும் பிரதமர் அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாடு முடிந்த பின்னர் 30-ந்தேதி ஆப்பிரிக்க பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
டெல்லியில் 4 நாட்கள் பிரமாண்ட மாநாடு நடப்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply