துருக்கியில் தேடுதல் வேட்டையின்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 7 பேர் பலி

isisகடந்த 10-ந்தேதி துருக்கி தலைநகர் அங்காராவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலை படை பிரிவினர் பொதுமக்கள் நடத்திய அமைதி ஊர்வலத்துக்குள் புகுந்து 2 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் உத்தரவிட்டார். இதையடுத்து தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை கண்டுபிடித்து தாக்குதல் நடத்தும் வேட்டையில் துருக்கி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்தநிலையில் நேற்று காலை, குர்திஷ் இன மக்கள் அதிகம் வசிக்கும் தியார்பக்கீர் நகரின் ஒரு பகுதியில் 10-க்கும் மேலான வீடுகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

இதனால், வாகனங்களில் அங்கு விரைந்த போலீசார் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீடுகளை முற்றுகையிட்டு அவர்களை சரண் அடையும்படி கூறினர். அதற்கு மறுத்த தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

 

இதனால் போலீசாரும் பதிலுக்கு சுடத் தொடங்கினர். இரு தரப்பினரும் துப்பாக்கி சூடு நடத்தியதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த சண்டையின்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 4 போலீசார் படுகாயம் அடைந்தனர். இவர்களில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

போலீசாரின் இந்த தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டதாகவும் சண்டை தொடர்ந்து நீடித்து வருவதாகவும் துருக்கி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், கொல்லப்பட்ட தீவிரவாதிகள் கடந்த 10-ந்தேதி நடத்திய தாக்குதலில் தொடர்பு கொண்டவர்களா? என்பது குறித்து போலீசார் உறுதியாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

 

குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் தீவிரவாதிகள், சிரியாவின் முக்காபரத் ரகசிய போலீசார், சிரியன் குர்திஷ் பி.ஒய்.டி. தீவிரவாதிகள் ஆகியோர் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் கூட்டாக இணைந்து துருக்கியில் குண்டுவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அதிபர் தாயிப் எர்டோகன் ஏற்கனவே குற்றம்சாட்டி இருப்பது, குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply