கைதிகள் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் : செல்வம் அடைக்கலநாதன்

selvamகைதிகள் விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், தமது விடுதலை குறித்து திருப்தியடையாத பட்சத்தில் கைதிகள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

 

நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதியே உறுதிமொழி வழங்கியிருந்தார். எனவே கைதிகளின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கே இருப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் எம். பி சுட்டிக்காட்டினார்.நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அடைக்கலநாதன் எம். பி மேற்கண்டவாறு கூறினார்.

 

கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திப்பதற்கு அண்மையில் நடைபெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய தலைவர் சம்பந்தன் ஐயா ஜனாதிபதியை கூடிய விரைவில் சந்திப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

பிரதமரோ அல்லது வேறுயாரோ என்ன பதிலைச் சொன்னாலும் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியே இறுதி முடிவைச் சொல்ல வேண்டும் என்றும் அடைக்கலநாதன் எம். பி தெரிவித்தார். ஏனெனில் அவருடைய உறுதிமொழியை நம்பியே கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

 

அரசாங்கம் வழங்கும் முடிவை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் போராட்டத்தைத் தொடரவேண்டி ஏற்படும் என கைதிகள் கூறியுள்ளனர். அவ்வாறான போராட்டத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்குமா எனக் கேட்டதற்குப் பதிலளித்த அடைக்கலநாதன் எம். பி, நாம் ஏற்கனவே அதனைக் கூறியிருந்தோம்.

 

நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடயத்தில் தீர்வொன்றைத் தராவிட்டால் கைதிகள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறியிருந்தனர். இதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

 

அதேநேரம், கைதிகள் முழுப்பேரையும் அரசாங்கம் விடுவிக்க வேண்டும். இவர்களை விடுதலை செய்வதன் ஊடாகவே ஏனைய விடயங்களில் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply