போலீஸுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே தவறான புரிதல்கள் இருப்பது உண்மைதான்: ஒபாமா
அமெரிக்கா பாதுகாப்பாக இருப்பதற்கு அந்நாட்டு போலீஸ் துறையே காரணம் என்று பாராட்டிய அதிபர் ஒபாமா, சிறுபான்மையினருக்கும், போலீஸுக்கும் இடையே தவறான புரிதல்கள் இருப்பது உண்மைதான் என்றார்.சர்வதேச போலீஸ் தலைமைகளின் கூட்டமைப்பு நிகழ்ச்சி சிகாகோவில் நடந்தது. இதில் அதிபர் ஒபாமா பேசியதாவது:
அமெரிக்கா பாதுகாப்பாக இருப்பதற்கு போலீஸ் அதிகாரிகள்தான் காரணம். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்கள்தான் பல நேரங்களில் பலிகடா ஆக்கப்படுகின்றனர். சமூகத்தில் குற்றங்கள் நிகழும் போது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் தோல்வி நிகழும் போதும், போலீஸ் அதிகாரிகள்தான் பலிகடா ஆகின்றனர். எத்தனை சவால்களை சமாளித்து நீங்கள் (போலீஸார்) உங்கள் பணிகளை செய்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.
கடந்த 20 ஆண்டு புள்ளிவிவரத்தை பாருங்கள். சமூகத்தில் வன்முறைகள், படுகொலைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் போலீஸாரின் நடவடிக்கைகள்தான். போலீஸாருக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையில் தவறான புரிதல்கள் தொடர்ந்து இருக்கின்றன என்பது உண்மைதான். அதை ஒரு நாள் இரவில் மாற்றிவிட முடியாது. சிறுபான்மை மக்களிடம்தான் அதிக குற்றங்கள் நடக்கின்றன. அதை முற்றிலும் தடுத்து நிறுத்துவது கடினமான பணிதான்.
போலீஸார் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். குற்றவியல் நீதி முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். அதன்மூலம் குற்றங்கள் குறையும். ஒவ்வொரு குற்றத்தையும் நம்மால் தடுத்துவிட முடியாது. ஒவ்வொரு சோகத்தையும் நம்மால் தடுக்க முடியாது.
உலகில் தீய சக்திகள் இருக்கின்றன. அதேபோல் தீய மனிதர்கள் இருக்கின்றனர். சில நேரங்களில் ஏன் இப்படி நடக்கிறது என்பது நமக்கு தெரியாது. அதை புரிந்து கொள்ள முடிவதில்லை. அதற்காகத்தான் சட்டதிட்டங்களை நாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். அதற்காகத்தான் சட்ட அமலாக்கத் துறை தேவைப்படுகிறது. எனவேதான் உங்கள் (போலீஸ்) பணி மிகவும் அபாயகரமானது. தீயவை எல்லாவற்றையும் நம்மால் ஒழிக்க முடியாது. எனினும் சில நடவடிக்கைகள் நாம் எடுத்தால், எங்களால் உங்களுக்கு உதவ முடியும். அதன்மூலம் இந்த சமூகமும் சட்ட அமலாக்கத் துறையினரின் கூட்டாளிகளாக ஆவார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply