புலித் தலைமையின் சுயநலமிக்க செயற்பாடே வன்னி மக்களின் இன்றைய நிலைக்கு காரணம்:அமைச்சர் டக்ளஸ்
சுயலாபம் கருதிய புலித் தலைமையின் செயற்பாடுகள் தான் இன்று இவ்வாறாதொரு நிலைமை வன்னி மக்களுக்கு ஏற்படக் காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று ஏற்பட்டிருக்கும் இந் நிலைமையைத் தொடரவிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் இடமளிக்கமாட்டார். விரைவில் சொந்த இடங்களில் வன்னி மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் வரை சகல வசதிகளும் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் இவ்விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் விரைவில் கலந்துரையாட இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நலன்புரி நிலையத்திற்கு நேற்று விஜயம் செய்து அங்கு தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் இங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நம்பி இப்பகுதியில் எப்போது காலடி எடுத்து வைத்தீர்களோ, அந்த நிமிடம் முதல் உங்களது உயிர் வாழும் உரிமையும், பேச்சு உரிமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று உங்களுக்கான நடமாடும் உரிமையையும் தொழில் செய்யும் உரிமையையும் நீங்கள் இன்னும் சில காலத்தில் பெற்றுக் கொள்ளலாம். பாதுகாப்பு நிலைமைகள் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் உங்களுக்கான இயல்பு வாழ்க்கை தானாகவே திரும்பிவிடும்.
இங்கு கருத்து தெரிவித்த, நலன்புரி நிலைய மக்கள், தாங்கள் வன்னியில் இருந்தபோது புலிகள் மேய்ப்பர்களாகவும், தாங்கள் மேய்க்கப்பட்டவர்களாகவும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்ந்து வந்ததாகவும் எப்போதும் அதிகாரத் தோரணையின் கீழ் புலிகள் தங்களை நடத்தி வந்ததாகவும் கூறினார். இந்நிலையில் மாற்றம் ஏற்படுத்தி தங்களது இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்து தரும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மக்கள் கோரிக்கையும் விடுத்ததுடன் , அமைச்சர் தங்களுக்கு எப்போதும் உதவியாக இருப்பார் என்பதில் தங்களுக்கு எவ்வித சந்தேகங்களும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply