ரஷிய விமான விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை குழு விசாரணையை தொடங்கியது
எகிப்தில் இருந்து ரஷியா சென்ற போது விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக சர்வதேச விசாரணை குழு விசாரணையை தொடங்கியது. எகிப்தில் இருந்து ரஷியா சென்ற போது விமானம் விழுந்து நொறுங்கியதில் 224 பேர் பலியானார்கள். இந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது. விமானம், சினாய் தீபகற்பத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நெகேல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கி கிடந்ததை ராணுவ விமானங்கள் கண்டு பிடித்தது. விமானம் உருக்குலைந்து, சின்னாபின்னமாகி விட்டது. விமானத்தின் சிதைவுகள், மலைப்பகுதியான அல் ஹசானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்டு சென்று, சிறிது நேரமே ஆன நிலையில், தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அதன் விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். வேறு வழியில் திருப்பி விடவும் அனுமதி கேட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. இந்த விமானத்தில் ஏற்கனவே என்ஜின் கோளாறு இருந்து வந்துள்ளதாகவும், அதை சரிசெய்து தருமாறு விமான நிறுவனத்திடம் சிப்பந்திகள் குழு தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும், அந்த வேண்டுகோள் கண்டுகொள்ளப்படாததே இந்த விபரீதத்துக்கு வழி வகுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்கிறபோதுதான் விமானம் விழுந்து நொறுங்கியதின் பின்னணி என்ன என்பது மட்டுமல்லாமல், கடைசி நிமிடத்தில் விமானத்தில் நடந்தது என்ன என்பதும் வெளிச்சத்துக்கு வரும்.
இதற்கிடையே ரஷிய விமானத்தை ‘நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்று அறிவித்து உள்ளனர்.
எகிப்து, ரஷியா மறுப்பு
ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக கூறுவதை ரஷியாவும், எகிப்தும் மறுத்துவிட்டது.
எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் பேசுகையில், விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்துவதற்கு வாய்ப்பு கிடையாது என்று நிபுணர்கள் உறுதிசெய்து உள்ளனர் என்று கூறிஉள்ளார்.
இதற்கிடையே ரஷியா போக்குவரத்து துறை மந்திரி மாக்சிம் சோகோலோவ் பேசுகையில், துல்லியமாக இதனை கருத்தில் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். “எகிப்து விமானத்துறை அதிகாரிகள், ரஷிய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்திய பின்னர் உண்மையானது நமக்கு தெரியவரும். தீவிரவாதிகள் கூற்றில் நம்பிக்கை இல்லை என்றே ராணுவம் பார்க்கிறது” என்று எகிப்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச விசாரணை தொடங்கியது
ரஷிய விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக சர்வதேச விசாரணை குழு விசாரணையை தொடங்கிஉள்ளது.
விமானம் விபத்துக்குள் சிக்கிய பகுதியில் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு உள்ளனர். எகிப்து தலைமையிலான விசாரணையில் ரஷியா மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளும் இணைந்து உள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதற்கிடையே விமானத்தின் எரிபொருளை விசாரணை அதிகாரிகள் சோதித்து வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள் சிக்கியிருக்கவும் வாய்ப்பு உள்ளது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விமானத்தை தயார் செய்தவர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை அதிகாரிகள் விசாரித்து உள்ளனர். விதிமுறைகளை மீறி அந்த விமானத்தை இயக்கியதாக விமான நிறுவனமான கொகலிமாவியா மீது ரஷியாவில் கிரிமினல் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தப்படுகிறது.
விமானத்தில் ஏற்கனவே என்ஜின் கோளாறு இருந்தது என்று கூறப்படுவதும் மறுக்கப்பட்டு உள்ளது. விமானம் நன்றாக இருந்த நிலையிலே இயக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply