கடினமான நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை எதிர்பார்க்கவில்லை : கலாநிதி சரத் அமுனுகம

இலங்கை அரசாங்கம் கோரியிருந்த 190 கோடி டொலர் கடன் தொகைக்கு கடினமான நிபந்தனைகளை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து இலங்கை எதிர்பார்க்கவில்லை என்று பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம கூறியுள்ளார். இலங்கை கோரியிருந்த கடன் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு நேற்று (மார். 20) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவிருந்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவடைந்ததையடுத்து அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் 190 கோடி டொலரை கடனாகக் கோரியிருந்தது. இதேவேளை, இந்தக் கடன் உதவி தொடர்பாக இதுவரை சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எவற்றையும் முன்வைக்கவில்லையென மத்திய வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச நாணயநிதியம் உதவி அளிக்க விரும்புகிறது. கடந்த காலத்தில் போன்று நிபந்தனைகளை முன்வைக்கும் நிலைமை சாத்தியமில்லை (ஏனெனில் உலக பொருளாதார நெருக்கடி) என்று தனது பெயரை குறிப்பிடவிரும்பாத மத்திய வங்கி அதிகாரி ஒருவர் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர் அனுப்பும் பணம் 6.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் வெளிநாட்டு செலாவணிக் கையிருப்பானது 1.3 மாதகால இறக்குமதிக்கே போதியதாக இருப்பதாகவும் மத்திய வங்கியிலிருந்து கிடைத்த பிந்திய விபரத்தை அடிப்படையாகக் கொண்ட செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பொருளியலாளர்களும் தனியார் துறையினரும் வரவேற்றுள்ளனர். ஆனால், இந்தக் கடன்தொகையை வழங்க கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படலாமென்ற அச்சமும் காணப்படுகிறது.

ஆனால், ஏதாவது கடினமான நிபந்தனைகளை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து இலங்கை எதிர்பார்க்கவில்லை என்று பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply