எகிப்தில் விமானம் விழுந்து 224 பேர் பலியானதில், 163 பேரின் உடல்கள் மீட்பு

air pleneஎகிப்தில் விமானம் விழுந்து 224 பேர் பலியானதில், 163 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன.224 பேருடன் எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்ற ரஷிய விமானம் (ஏ-321 ஏர் பஸ்), சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்பத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நெகேல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. அதன் சிதைவுகள் அல் ஹசானாவில் கண்டுபிடிக்கப்பட்டன.இந்த கோர சம்பவத்தில், 224 பேரும் கூண்டோடு உயிரிழந்தனர்.

அங்கு மீட்பு பணிகள் உடனடியாக முடுக்கி விடப்பட்டன. 163 உடல்கள் மீட்கப்பட்டு, எகிப்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை முடிந்துள்ளது.

மீதி 61 பேரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ரஷிய வல்லுனர்கள் உதவி வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால், அங்கு மற்றவர்கள் செல்வதற்கு எகிப்து அரசின் மூத்த வக்கீல் நபில் அகமது சதெக் தடை விதித்துள்ளார். விமானத்தின் சிதைவுகளை கைப்பற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழுந்து நொறுங்கிய விமானத்தின் கருப்பு பெட்டிகளை கெய்ரோவில் வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ரஷிய போக்குவரத்து மந்திரி மேக்சிம் சோகோலோவ், நெருக்கடி கால மந்திரி விளாடிமிர் புச்கோவ் ஆகியோர் கெய்ரோ வந்துள்ளனர். அவர்களுடன் சம்பவம் தொடர்பான புலன் விசாரணையில் உதவுவதற்காக ரஷிய விமான தொழில் நுட்ப வல்லுனர்களும் வந்துள்ளனர்.

விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்று அறிவித்தாலும்கூட, அதை ரஷியாவும், எகிப்தும் ஏற்க மறுக்கின்றன.

இந்த நிலையில், ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியது எப்படி என்று உறுதிபட தெரிகிற வரையில், எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் தங்கள் விமானங்களை இயக்குவதில்லை என ஜெர்மனியின் லுப்தான்சா, துபாயின் எமிரேட்ஸ், ஏர் அரேபியா பிரான்சின் ஏர் பிரான்ஸ் விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தங்கள் விமானங்களை அவை மாற்றுப்பாதையில் இயக்குகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply