மாலைதீவுகளில் அவசரகால நிலை அறிவிப்பு
அரசியல் குழப்பங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாலைதீவுகளில், அடுத்துவரும் 30 நாட்களுக்கு, அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு நேரப்படி, புதன்கிழமை (04) நண்பகல் 12 மணி முதல் இது அமுலுக்கு வந்துள்ளது. மாலைதீவுகளின் எதிர்க்கட்சிகள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவரும் நிலையில், அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான மாலைதீவுகள் ஜனநாயகக் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே, இந்த அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மார்ச்சில், அக்கட்சியின் தலைவர் மொஹமட் நஷீட், சிறையிலடைக்கப்பட்டமைக்கு எதிராகவும் நாட்டின் ஜனநாயக நிலைமை சீரழிந்து வருவதாகவும் தெரிவித்தே, இவ்வார்ப்பாட்டம் இடம்பெறவிருந்தது.
தற்போது, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான உச்சபட்ச அதிகாரம், பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அறிவிப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் பேச்சாளர் முவாஸ் அலி, ஒவ்வொரு குடிமகனினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமுகமாக, ஜனாதிபதி யமீன், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அருகில், குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக, பொலிஸார் அறிவித்திருந்திருந்தனர்.
அத்தோடு, அண்மையில் ஜனாதிபதி பயணம் செய்த படகில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் காரணமாக, அவருக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காத போதிலும், அவரது மனைவிக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. இது, திட்டமிட்ட குண்டுவெடிப்பு எனவும், அதில் அந்நாட்டின் உப ஜனாதிபதி அஹ்மட் அடீப் சம்பந்தப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தும், அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply