வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து சசிகலா உள்ளிட்டோரை விடுவித்தது செல்லும்: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை மயிலாப்பூரில் உள்ள ‘அமிர்தாஞ்சன்‘ நிறுவனத்துக்குரிய சொத்தை 1999-ம் ஆண்டு சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் மற்றும் சுதாகரன் பங்குதாரர்களாக உள்ள 3 நிறுவனங்கள் பெயரில் விலைக்கு வாங்கப்பட்டது. அதாவது மொத்தமாக இந்த நிலத்தை வாங்காமல் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் 3 நிறுவனங்கள் பெயரில் தனித்தனியாக வாங்கப்பட்டது. இந்த சொத்து வாங்கியது தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சசிகலா உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்ட எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டு, அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2004-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வருமான வரித்துறை உதவி ஆணையர் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை நீதிபதி பி.ராஜேந்திரன் விசாரித்தார். அப்போது வருமான வரித்துறை சார்பில் வக்கீல் ராமசாமி, சசிகலா உள்ளிட்டோர் சார்பில் வக்கீல்கள் ஜி.சரவணகுமார், செந்தில், அன்புக்கரசு, செல்வகுமார் உள்ளிட்ட பலர் ஆஜராகிவாதிட்டார்கள்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பி.ராஜேந்திரன், ‘சசிகலா உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து எழும்பூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லும். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply