பிணை வழங்கும் முடிவை கைதிகள் நிராகரிப்பு! நாளை முதல் போராட்டத்தில் குதிப்பதற்கு முடிவு

prisionஎமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையால் எமது விடுதலையை வலியுறுத்தும் வகையில் இடைநிறுத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை முதல் தொடரப் போகின்றோமென நாடளாவிய ரீதியில் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். எமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியோடு எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாகவே கடந்த மாதம் 12ம் திகதி ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை 17ம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 

இது தொடர்பாக அவர்களது உறவுகள் கருத்து வெளியிடுகையில்,

 

நாட்டில் பயங்கரவாதச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை பல்வேறு தடவைகளில் கோரியிருந்த போதும் அக்கோரிக்கைகள் அந்தந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டனவே தவிர எமது உறவுகளுக்கான தீர்வுகள் எவையும் வழங்கப்படவில்லை.

 

இவ்வாறான நிலையில் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்தும் அரசாங்கமொன்று கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் மீண்டும் புதிய அரசாங்கம் ஆட்சிப்பீடமேறியது. இப்புதிய மாற்றமானது நீண்டகாலமாக எம்மை விட்டுப் பிரிந்திருக்கும் எம் உறவுகளை மீண்டும் எம்முடன் இணைந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் எனப் பாரிய நம்பிக்கை கொண்டிருந்தோம்.

 

எனினும் புதிய அரசாங்கம் பதவியேற்று இற்றைக்கு ஆறுமாதங்கள் உருண்டோடியிருக்கும் நிலையில் எம் உறவுகளின் விடுதலை தொடர்பாக எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையிலேயே அவர்கள் கடந்த மாதம் 12ம் திகதி உறவுகளுடன் வாழ்வதற்கு வழிவிட்டு பொதுமன்னிப்பளித்து விடுதலையளியுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து உயிர் துறக்கும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

 

எனினும் ஐந்து தினங்கள் கடந்த நிலையில் பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் ஒக்டோபர் 31ம் திகதி முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நவம்பர் 7ம் திகதிக்கு முன்னதாக இவ்விடயத்திற்கு நிரந்தர தீர்வளிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனுடனான தொலைபேசிக் கலந்துரையாடலில் வாக்குறுதி அளித்திருந்தார்.

 

எவ்வாறெனினும் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக்குழுவினரை சந்தித்த போது பகுதி பகுதியாக பிணையில் விடுதலையளிக்கப்படுவதாகவே கூறப்பட்டிருக்கின்றது. குறிப்பாக திங்கட்கிழமை 30பேரும் 20ம் திகதிக்கு முன்னதாக 32பேரும் பிணையில் விடுதலையளிக்கப்படவுள்ளனர். 48பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

 

அவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியே இறுதி தீர்மானம் எடுக்கவேண்டும். ஏனையோரின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் அமைச்சரவை குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது அவர்களின் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஜனநாயக ரீதியாக நல்லாட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனைக் காலத்தை விடவும் அதிகமாக சிறைக்கூடங்களில் வாடும் எமது உறவுகளை எம்முடன் இணையுங்கள் என்றே கோருகின்றோம்.

 

எமது பிள்ளைகள் குடும்பங்கள் அவர்கள் இல்லாமையால் வறுமையின் கோரத்திற்குள் துவண்டு கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் என்னசெய்வதென்ற நிலைமையே உருவாகின்றது. எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்வதென்ற கேள்வியே எழுகின்றது. ஆகவே எமது உறவுகளின் விடுதலை சட்ட நுணுக்கங்கள் உள்ளிட்ட வேறுபல காரணங்களை காட்டி விடுதலையை தாமதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

கடந்த காலத்தில் ஜே.வி.பியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அவர்களை கைது செய்து சிறைகளில் அடைத்தார்கள். பின்னர் அவர்களை விடுதலை செய்யும் போது சிறுகுற்றமிழைத்தவர்கள், பெருங்குற்றமிழைத்தவர்கள் நடுத்தரக்குற்றமிழைத்தவர்கள் என வகைப்படுத்தாது ஒட்டுமொத்தமாக பொதுமன்னிப்பளித்தே விடுதலை செய்தார்கள். உலகின் எந்தவொரு நாட்டிலும் போதைப்பொருள் கடத்துவது மரணதண்டனை விதிக்கப்படக்கூடியளவுக்கு பாரிய குற்றமாக காணப்படுகின்றது.

 

அவ்வாறிருக்கையில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மரணதண்டனை வழங்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பளித்திருக்கின்றார். மேலும் யுத்தத்தில் நேரடியாக தொடர்பு பட்ட 12ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து முன்னாள் போரளிகள் என்ற புதிய பெயருடன் சமுகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் நிகழ்ந்துள்ள நிலையில் வெறுமனே சந்கேத்தின் பேரிலும், சிறு குற்றச்சாட்டுக்களுடனும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு ஏன் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யமுடியாது எனக் கேள்வியெழுப்பினர்.

 

கூட்டமைப்பிடம் கோரிக்கை

 

எமது விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் மேடையாக பேசினார்கள். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்கும் சேர்த்தே நாம் வாக்களித்தோம். தற்போது வடக்கு கிழக்கை சேர்ந்த 16பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் உள்ளனர். எமது உறவுகளின் விடுதலை தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தார்கள். எமது உறவுகளை நேரில் சென்று பார்த்து உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்கள். இவை அனைத்தையும் நாம் வரவேற்கின்றோம்.

 

எனினும் எமது உறவுகளின் விடுதலையை அழுத்தமாக தற்போதுவரையில் வலியுறுத்தவில்லையென்ற கருத்து எம்மிடத்தில் எழுக்கின்றது. காரணம் 16பாராளுமன்ற உறுப்பினர்களும் பகுதிபகுதியாக பிணையில் விடுதலையளிப்பது என்ற கருத்தை அரசாங்கம் முன்வைத்திருந்த போது அதனை நிராகரித்திருக்கவேண்டும். மக்கள் எதற்காக ஆணை வழங்கினார்கள் என்பதை வலியுறுத்தியிருக்கவேண்டும்.

 

ஆகக்குறைந்தது எமது உறவுகளின் விடுதலைக்கு மாற்று வழியொன்றையாவது முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும் அவ்வாறில்லாது மென்போக்குடன் செயற்பட்டமையானது எமக்கு கவலையளிப்பதாக உள்ளது.

 

அனைவரும் ஆதரவளியுங்கள்

 

நல்லாட்சி தொடர்பாக பேசும் அரசாங்கம் எமது உறவுகள் அனைவரையும் தடுத்து வைப்பதை தொடராது உடன் விடுதலையளிக்கவேண்டும் என்பதை அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், சர்வமதக் குழுக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு வலியுறுத்தல்களை செய்ய வேண்டும்.

 

சிறைகளில் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவுள்ள எமது உறவுகளுக்கு ஆதரவாக இன, மத, மொழி, அரசியல் பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply