மியான்மர் பாராளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி அபார வெற்றி

sugi தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும்கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

440 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, மீதமுள்ள 25 சதவீத இடங்களை ராணுவமே நிரப்பிக்கொள்ளும்.

 

இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்த மூன்று கோடி மக்களில் 80 சதவீதம் பேர் தங்களது ஜனநாயகக் கடமையை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு முடிந்த ஞாயிற்றுக்கிழமை மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது.

 

யாங்கூன் நகரில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளை ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய கட்சியான என்.எல்.டி., வென்றுள்ளது. இதேபோல், நேற்றைய நிலவரப்படி, சுமார் 70 சதவீத இடங்களில் ஆங் சான் சூகி-யின் கட்சி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 88 தொகுதிகளுக்கு மட்டுமே முடிவுகள் வெளியிடப்பட்டன. இவற்றில் 78 இடங்களை தேசிய ஜனநாயக லீக் வேட்பாளர்கள் கைப்பற்றி இருந்தனர். நாடு முழுவதும் அக்கட்சிக்கு ஆதரவாகவே முடிவுகள் வெளியாகின.

 

ஆனால், இதர தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளின் இறுதி நிலவரம் வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து, கருத்து தெரிவித்த தேசிய ஜனநாயக லீக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மத்திய தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது. எனவே, தேர்தல் ஆணையம் சூழ்ச்சி வேலைகளில் அல்லது வேறு சில திட்டங்களுடன் இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

 

இந்நிலையில், இங்கிலாந்தின் பிரபல செய்தி நிறுவனமான பி.பி.சி.-க்கு இன்று பேட்டியளித்த ஆங் சான் சூகி, இந்த தேர்தலில் தங்களது கட்சி 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், தனது தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி வெளிநாட்டு நபரை திருமணம் செய்துகொண்ட அவர் நாட்டின் அதிபராகவோ, பிரதமராகவோ பதவி ஏற்க முடியாது. எனினும், ஒரு ஆளுங்கட்சியின் தலைவராக இருந்து, நாட்டை நான் நல்ல முறையில் வழிநடத்திச் செல்வதில் யாரும் குறுக்கிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அக்கட்சிக்கு 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. மியான்மர் அரசியல் அமைப்பு சட்டப்படி, 67 சதவீத வாக்குகளை பெற்றால் ஆட்சி அமைக்க முடியும். எனவே, ஆங் சான் சூகி கட்சி மியான்மரில் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

 

19-5-1945 அன்று அந்நாளில் பர்மாவாக இருந்த நாட்டின் தலைநகரான ரங்கூனில் பிறந்த ஆங் சான் சூகியின் தந்தையான ஆங் சான், நவீன கர்மா ராணுவத்தை கட்டமைத்து உருவாக்கி, அப்போது பர்மாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் அரசிடம் இருந்து விடுதலை பெற்றுத் தந்தார். அதே ஆண்டு அரசியல் எதிரிகளால் அவர் கொல்லப்பட்டார்.

 

அவரது மரணத்துக்கு பின்னர் அமைந்த பர்மா அரசில் ஆங் சானின் மனைவியான கின் க்யி-க்கு நல்ல கவுரவம் கிடைத்தது. இந்தியா மற்றும் நேபாளத்துக்கான பர்மாவின் தூதராக அவர் நியமிக்கப்பட்டார். இந்த பணிநிமித்தமாக தாயாருடன் இந்தியாவுக்கு வந்த ஆங் சான் சூகி, டெல்லியில் உள்ள கான்வென்ட் பள்ளியிலும், பின்னர் டெல்லி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரியிலும் படித்து பட்டதாரியானார்.

 

பின்னர், 1969-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் நகரில் உள்ள செயின்ட் ஹக்ஸ் கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளநிலை பட்டம் பெற்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்று அங்கு வாழ்ந்துவந்த பிரபல பர்மிய மொழி பின்னணிப் பாடகியும், தங்களது குடும்ப நண்பருமான மா தான் யே என்பவருடன் தங்கி, அங்கு மூன்றாண்டுகள் எழுத்துப்பணியாற்றிவந்த ஆங் சான் சூகி, பூட்டானில் வசித்தபடி திபெத்திய கலாச்சாரம் தொடர்பாக ஆராய்ச்சிகளை செய்துவந்த டாக்டர் மைகேல் அரிஸ் என்பவரை 1-1-1972 அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரு மகன்கள் பிறந்தனர்.

 

1988-ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயாரை கவனித்துக் கொள்வதற்காக பர்மாவுக்கு வந்த அவரை, நாட்டு மக்களிடையே புரட்சி செய்யும் நோக்கத்தை ஏற்படுத்திய தேசத்துரோகக் குற்றச்சாட்டின்கீழ் 1989-ம் ஆண்டு ராணுவம் கைது செய்து வீட்டுக்காவலில் அடைத்தது.

 

அவரது கணவர் அரிஸுக்கு 1995-ம் ஆண்டுக்குப் பிறகு விசா அளிக்க அப்போது பர்மாவை ஆண்ட ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஜுண்டா கட்சி மறுத்து விட்டது. இதற்கிடையில், 1997-ம் ஆண்டு புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கக்கூடிய அளவுக்கு எங்கள் நாட்டில் உயர் சிகிச்சை வசதிகள் இல்லை. எனவே, விசா வழங்க முடியாது என அரசு அறிவித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐ.நா.சபை மற்றும் போப் இரண்டாம் பால் ஆகியோர் தலையிட்டும் அவருக்கு இறுதிவரை விசா வழங்கப்படவே இல்லை.

 

கணவரை கவனித்துக் கொள்ள விரும்பினால் ஆங் சான் சூகி அவர் வாழும் இங்கிலாந்துக்கு சென்று கவனித்துக் கொள்ளட்டும் என அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. பர்மாவை விட்டு சென்றால், மீண்டும் நம்மை நாட்டுக்குள் அனுமதிக்க அரசு அனுமதி மறுத்து விடுமோ? என்று சந்தேகித்த ஆங் சான் சூகி பர்மாவை விட்டு செல்லவில்லை.

 

இந்நிலையில், புற்று நோயின் தீவிரத்தால் 27-3-1999 அன்று டாக்டர் மைகேல் அரிஸ் மரணமடைந்தார். ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்ட 1989 முதல் 1999 வரை அவரை அரிஸ் மொத்தம் ஐந்து முறை மட்டுமே அவரை சந்தித்தார். கடைசியாக 25-12-1995 அன்று இருவரும் சந்தித்து கொண்டனர். 1995-ம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர், அடுத்ததாக 2000-ம் ஆண்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு பின்னர் 19 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

 

மீண்டும் 30-5-2003 அன்று வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு 13-11-2010 அன்று விடுதலையானார். அதன் பின்னர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து, பிரசாரம் செய்து இந்த தேர்தலில் தனது கட்சியை ஆங் சான் சூகி வெற்றியடைய வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply