சிரியாவில் இருந்து அகதிகளாக வந்து ஐரோப்பிய நாடுகளில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள்
பாரிஸ் நகரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சிரியா நாட்டில் இருந்துவந்த அகதிகள் என்ற போர்வையில் ஐரோப்பாவில் பதுங்கியிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் 3 தனித்தனி குழுக்களாக புகுந்த 8 தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல்களில் 128 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து பாரிஸ் நகரம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. எல்லைகளும் ‘சீல்’ வைத்து மூடப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதனையடுத்து, ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் அதிர்ச்சி தகவலாக, பாரிஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சிரியாவில் இருந்துவந்த அகதிகள் போன்று ஐரோப்பாவில் போலியாக பதுங்கியிருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
பாரிஸ் கொடூரத் தாக்குதலில் தொடர்புடைய இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள், சிரியாவில் இருந்து போலியாக அதிகள் போன்றுவந்து பதுங்கியிருந்தனர் என்று டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டு பேர் அகதிகளுக்கான பாஸ்போர்ட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கிரீஸ் நாட்டுக்கு வந்துள்ளனர்.
பாரிஸில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் உடலில் இருந்து பிரான்ஸ் நாட்டு போலீசார் கைப்பற்றிய சிரியா அகதியின் பாஸ்போர்ட்டில் கிரிஸ் நாட்டு பதிவுஎண் காணப்படுகிறது. இதைவைத்து, சிரியாவில் இருந்து துருக்கி வழியாக இரண்டு தீவிரவாத குழுக்கள் கிரீஸ் நாட்டிற்கு பயணத்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
தாக்குதல் நடத்திய மற்றொருவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட் எகிப்தில் எடுக்கப்பட்டதை காட்டுகிறது என்று செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இத்தகைய தகவல்கள் பிரான்ஸ் உளவுத்துறையின் தோல்வியையே காட்டுகிறது என்றும் அந்த செய்தியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இரண்டு பேரும் கடந்த மாதம் கிரீஸ் நாட்டிற்கு வந்துள்ளதாக பிரான்ஸ் போலீசார் தெரிவிக்கின்றனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் இஸ்சொன்னேவில் இருந்துவந்த மொஸ்டேபை இஸ்மாயில் உமர்(வயது 29) என்று பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேபோல், மற்றொரு தீவிரவாதியின் பெயரை செர்பியா நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. அவனது பெயர், அகமத் அல்முகமது (வயது 25) என்றும் பாரிஸ் செல்லும் வழியில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி ஐரோப்பாவின் கிரீஸ் நாட்டின் லெரோஸ் தீவிற்கு வந்துள்ளான் என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.
அகதிகளாக சிறிய படகில் ஏறி இவர்கள் வந்துள்ளனர். அல்முகமது மாசிடோனியாவில் இருந்து செர்பியாவிற்குள் அக்டோபர் 7-ம் தேதி நுழைந்ததாகவும், குரோஷியா மற்றும் ஆஸ்திரியாவிற்கு செல்வதற்கு முன்னதாக செர்பியாவில் அவன் தஞ்சம் கோரியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply