பாரிஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தற்கொலை?

isisபிரான்ஸ் தலைநகர் பாரிசில் 129 உயிர்களை பலிவாங்கிய தொடர் தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம்தீட்டி தந்தவன், சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீசாரால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்டெல்ஹமித் அபவுட்(28) என்று அண்மையில் தெரியவந்தது. மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான். இங்கிருந்தபடியே சிரியாவுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதப் பாசறையில் பயிற்சி பெற்ற இவன், பாரிஸ் தாக்குதலின்போது மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய பிராஹிம் அப்டெசலாம் என்பவனுடனும், இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றும் தேடப்பட்டு வரும் பலருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக பிரான்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அப்டெல்ஹமித் அபவுட்-டும், பாரிஸ் தாக்குதலில் பலியான பிராஹிம் அப்டெசலாம் என்பவனும் பெல்ஜியம் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த மாலென்பீக் பகுதியில் ஒன்றாக வசித்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முஹம்மது நபியை இழிவுப்படுத்தும் வகையில் கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பின்னர் பிரான்ஸ் போலீசாரை கொல்ல திட்டமிட்டபோது இவர்களின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் சிரியாவுக்கு தப்பிச்சென்ற அப்டெல்ஹமித் அபவுட், அங்கிருந்தபடியே பாரிசில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதலுக்கு திட்டம்தீட்டி தந்துள்ளான். பெல்ஜியம் நாட்டில் இவன் மீதான தீவிரவாத வழக்குகளின் அடிப்படையில், தலைமறைவாக இருக்கும் இவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பிரான்ஸ் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின் போது இவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பிரெஞ்சு தூதரான பிராங்கோயிஸ் ரெய்ச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு அவரளித்துள்ள பேட்டியில், “செயின்ட் டெனிஸ் நகரில் இன்று நடந்த தேடுதல் வேட்டையின் போது அப்டெல்ஹமித் அபவுட் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் தெரிகிறது. அபவுட் இறந்து விட்டான் என்ற இறுதி முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply