வடக்கில் மோதல் நடைபெறும் பிரதேசங்களில் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்:ஜோன் கெரி வேண்டுகோள்

இலங்கையின் வடக்கில் இடம்பெறும் போர் காரணமாக மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் முக்கிய செனட்டர்களில் ஒருவரான ஜோன் கெரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாதுகாப்பு வலயங்களில் பொதுமக்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவது மற்றும் கொல்லப்படுவது பெரும் கவலையளிப்பதாக உள்ளது.

பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

சிவிலியன் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் மேற்கொள்வதாக வெளியாகும் செய்திகள் பெரும் வேதனையளிக்கின்றது. அரசாங்கம் யுத்த பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களையும், தொண்டு நிறுவன ஊழியர்களையும் அனுமதிக்காமை ஏற்றுக்கொள்ள முடியாது.

படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போராட்டத்தின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளனர். இராணுவ நடவடிக்கைகள் முடிவுற்றதன் பின்னர், நாட்டில் விரைவில் அனைத்து இன சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான தீர்வுத் திட்டமொன்றை மஹிந்த அரசாங்கம் முன்வைக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கையின் நட்புறவு நாடு என்ற ரீதியில் வடக்கு நிலவரங்களை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply