செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கடந்த இரண்டு வருட வெற்றிகரமான செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக அவ்வமைப்பின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் நேற்று விசேட உரையாற்றிய ஜனாதிபதி பொதுநலவாய அமைப்பின் சிறந்த செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையும் தமது வேலைத்திட்டங்களில் இணைத்துக் கொண்டு செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு நேற்று பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானதுடன் இம் மாநாட்டில் சிறப்புரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மோல்டா அரசாங்கத்திற்கும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுள்ள பிரிட்டிஷ் மகாராணிக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையானது பொதுநலவாய ஸ்தாபக அங்கத்துவ நாடுகளில் ஒன்றாக செயற்பட்டு வரும் நாடாகும். பொதுநலவாய நாடுகள் அமைப்பில் கடந்த சில வருடங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது.
இலங்கை இது தொடர்பில் பெருமிதமடைகிறது.
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெற்றபோது அங்கத்துவ நாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அந்த முன்னேற்றம் தற்போது இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிட வேண்டும்.
அதேபோன்று உலக அபிவிருத்தி தொடர்பிலும் பொதுநலவாய நாடுகள் அமைப்பு விசேட கவனம் செலுத்தியதுடன் இதனைக் கருத்திற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையும் இந்த உலக அபிவிருத்திக்கான நோக்கத்தோடு தமது வேலைத் திட்டங்களிலும் அதனை முக்கிய விடயமாக இணைத்துக் கொண்டுள்ளது.
இந்த வகையில் இவ்விடயத்தில் பொதுநலவாய நாடுகளின் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களே சமூக உருவாக்கத்திலும் ஒன்றிணைப்பிலும் முக்கியமானவர்கள். இதற்கிணங்கவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை மாகம்புர பிரகடனமும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பொதுநலவாய அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இது தொடர்பில் கடந்த காலங்களில் திருப்திகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்கவே கொழும்பு பிரகடனமும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் நாம் கடந்த இரண்டு வருடங்களில் பெற்றுக்கொண்ட வெற்றி மகத்தானது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நாம் தலைமைப் பதவி வகித்த காலங்களில் தமக்கு உறுதுணையாக செயற்பட்ட நாடுகள், அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கும் ஜனாதிபதி தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அதேபோன்று மோல்டா அரசாங்கத்திற்கும் புதிய தலைவராகப் பதவியேற்கும் மோல்டா பிரதமருக்கும் ஜனாதிபதி தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பல்வேறு கலை கலாசார அம்சங்களுடன் நேற்றைய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு அமைந்ததுடன் இரண்டாவது அமர்வின் போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது தலைமைப் பதவியை மோல்டா பிரதமர் ஜோசப் முஸ்கட்டிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாவது அமர்வின் முடிவில் எலிசபெத் மகாராணியுடன் இணைந்து அரச தலைவர்கள் குழு புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்தும் 29 ஆம் திகதி வரை மாநாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply