தமிழகத்தில் மழை, வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் : முதல்வர் ஜெயலலிதா

rainதமிழகத்தில் கனமழை தொடரும் நிலையில், வெள்ள பாதிப்பு மிக்க பகுதிகளில் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை அதிகாரிகளும் எனது ஆணையின் பேரில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், ஒரு சில தினங்களில் மிக அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டதால், சில மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுவை நான் அனுப்பி வைத்தேன். இதன் அடிப்படையில், மழையால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் துரிதமாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியது.

மீண்டும் கனமழை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று (30.11.2015) இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்றும் (1.12.2015) கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

நேற்று தமிழகத்தில் பரங்கிப்பேட்டையில் 15 செ.மீ., மரக்காணத்தில் 14 செ.மீ., செய்யூரில் 13 செ.மீ., மதுராந்தகத்தில் 12 செ.மீ., என சில இடங்களில் மிக அதிக அளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மழை / வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடிய மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 29.11.2015 அன்றே மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய அறிக்கையில் இன்றும் (1.12.2015) நாளையும் (2.12.2015) தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

இந்த தொடர் மழை காரணமாக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை இன்று (1.12.2015) நான் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன்.

நான் ஏற்கெனவே உத்தரவிட்டதன் அடிப்படையில், தற்போது பெய்து வரும் கனமழையில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ வாய்ப்புள்ளதன் காரணமாகவும், மழை நீர் சூழும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மழை நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், கடலோர பாதுகாப்புப் படை ஆகியோர் தேவைக்கேற்ப பாதிக்கப்படும் மக்களை படகுகள் மூலம் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட இதர வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களுக்குத் தேவையான மருத்துவ முகாம்களைதொடர்ந்து நடத்தவும், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

அமைச்சர்கள் மேற்பார்வை

நேற்று (30.11.2015) இரவு முதல் அதிகமாக மழை பெய்து வரும் சென்னை, திருவள்ளூர், கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர்கள் மேற்பார்வையிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர்

பி.வி.ரமணா, மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், குறிப்பாக தாம்பரம் முடிச்சூர் பகுதிகளில், உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பி. தங்கமணி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மின்சாரம் மற்றம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், வீட்டுவசதி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு ஆர். வைத்திலிங்கம், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதி மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்புப்பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.

கடலூர் மாவட்டத்தில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.

பெருமழையின் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு மின்வாரியம் மின் கம்பங்கள் மற்றும் மின் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனையில் மீட்புப் பணிகள்

தாம்பரம் அரசு மருத்துவமனையின் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறும் உபரி மழை நீர் மருத்துவமனையின் அடித்தளத்தில் புகுந்துள்ளது. எனவே, அங்கு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை உடனடியாக 108 அவசர ஊர்திகளைப் பயன்படுத்தி இதர அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று தக்க சிகிச்சையை தொடர்ந்து அளித்திட நான் ஆணையிட்டுள்ளேன்.

அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு

மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 7.12.2015 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்தி வைத்திட நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த தேர்வுகள் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்.

உபரி நீர் திறப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த் தேக்கங்களில் மொத்த கொள்ளளவில் 83.8 சதவீதம் நிரம்பியுள்ளது. ஏரிகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 89 பெரிய நீர்த் தேக்கங்களில் 45 நீர்த் தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தமிழகத்தில் பொதுப் பணித் துறையின் கீழ் உள்ள 14,098 ஏரிகளில் 6,971 ஏரிகள் நிரம்பியுள்ளன.

நீர்த் தேக்கங்கள் மற்றும் ஏரிகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படும் போது, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தொடர்புடையவை
பள்ளி அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைப்பு: ஜெயலலிதா அறிவிப்பு
வானிலை முன்னறிவிப்பு: மேலும் 4 நாள் கனமழை நீடிப்பு

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply