சர்வதேச தரத்தில் இலங்கை ராணுவத்தை நவீனமயமாக்க இந்தியா உதவி
இந்தியா-இலங்கை இடையேயான பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்வதற்காக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் 30-ந்தேதி 4 நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு சென்றார். அங்கு அவர் அந்நாட்டு ராணுவ தளபதி கிருஷ்ணந்தா டி சில்வா மற்றும் ராணுவ அதிகாரிகளை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டம் தொடர்பாக இலங்கை ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சைபர் குற்றம் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தலில் இருந்து காக்க இலங்கை ராணுவத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவது அவசியம் என இந்திய தளபதி கூறினார். அப்போது இலங்கை ராணுவத்துக்கு புதுமையான பயிற்சிகள் அளிக்கவும் இந்தியாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு இந்திய ராணுவ தளபதியும் நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிக்க விருப்பம் தெரிவித்தார்.
இந்திய தீபகற்ப பகுதியில் தற்போது நிலவும் பல்வேறு விதமான பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக அலசப்பட்டது. முக்கிய தகவல்களை நட்புரீதியில் பரிமாற்றம் செய்து கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது.
இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே வீரர்களுக்கான பயிற்சி அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படும் என இந்திய ராணுவ தளபதி கூறியதுடன், எதிர்காலத்திலும் இது போன்ற பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஆகிய இரு நாட்டு தலைவர்கள் செய்து கொண்ட இந்தியா-இலங்கை அமைதி ஒப்பந்தம் மற்றும் கடந்த 1987-ம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தது போன்ற வரலாற்று சிறப்புமிக்க உறவு குறித்து இந்த கூட்டத்தில் நினைவு கூறப்பட்டது. அமைதிப்படையில் இளம் கமாண்டராக தான் இருந்ததாக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் குறிப்பிட்டார்.
இந்திய ராணுவ தளபதி வருகையையொட்டி ராணுவ ரீதியிலான ஒத்துழைப்புகள் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே வீரர்களுக்கான பயிற்சி, அதிகாரிகள் மட்டத்திலான ஒத்துழைப்பு, கடல் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவை தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவ தளபதியின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply