அமெரிக்காவில் தாக்குதல் நிகழ்த்திய தம்பதிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு; அதிகாரிகள் தகவல்
அமெரிக்காவின் சான் பெர்னாடினோ நகரில், விருந்து நிகழ்ச்சியின்போது 14 பேர் உயிரிழப்புக்குக் காரணமான துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய தம்பதிக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சையது ரிஸ்வான் ஃபரூக் (28) பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்டவர் எனவும், அவரது மனைவி தஷ்ஃபீன் மாலிக் (27) பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர் எனவும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சான் பெர்னாடினோ நகர துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணை, தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் அதிகாரிகள், சான் பெர்னாடினோ தாக்குதலில் ஈடுபட்ட ரிஸ்வான் ஃபரூக், தஷ்ஃபீன் மாலிக் தம்பதியின் இல்லத்தை சோதனையிட்டனர்.
அந்தச் சோதனையின்போது, ஏராளமான ஆயுதங்களும், 12 பைப் குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
இதன்மூலம், அவர்கள் மேலும் சில இடங்களில் தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கணினி, செல்லிடப் பேசி ஆகியவற்றையும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம், பயங்கரவாதப் பின்னணி உடையவர்களுடன் ரிஸ்வான் தம்பதி தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், சான் பெர்னாடினோ தாக்குதல் சம்பவத்துக்கு ஒரு நாள் முன்னதாக, கணினியிலிருந்து பல தகவல் பரிமாற்றப் பதிவுகளை ரிஸ்வான் தம்பதி அழித்துள்ளதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இது, அந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நிரூபிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
விருந்து நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட திடீர் கோபத்தால் ரிஸ்வான் தம்பதியர் தாக்குதல் நிகழ்த்தியிருந்தால், தகவல் பரிமாற்ற விவரங்களை அவர்கள் நிதானமாக அழித்திருக்க மாட்டார்கள் என்று எஃப்.பி.ஐ. அதிகாரிகள் கூறினர்.
துப்பாக்கித் தாக்குதலின்போது ஃபரூக்கும், தஷ்ஃபீனும் சண்டையிடுவதற்குத் தேவையான வசதிகளைக் கொண்ட கவச உடையை அணிந்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அவர்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கிகள், சட்டப்பூர்வமாக அவர்களால் வாங்கப்பட்டது எனவும், இயந்திரத் துப்பாக்கிகள் இன்னொருவர் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறினர்.
அந்த நபர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், சான் பெர்னாடினோ நகரில் நகராட்சி மருத்துவத் துறை ஊழியர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
500-க்கும் மேற்பட்டவர்கள் அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவரான சையது ஃபரூக், நிகழ்ச்சி முடியும் முன்னரே அந்த இடத்தைவிட்டு அகன்று, சிறிது நேரம் கழித்து தனது மனைவி தஷ்ஃபீன் மாலிக்குடன் திரும்பி வந்தார்.
தானியங்கித் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அந்த தம்பதி, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டுவிட்டு, காரில் தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். தப்பிச் சென்ற இருவரையும் காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில், ஃபரூக்கும், தஷ்ஃபீனும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply