இடப்பெயர்வால் பிரிந்திருக்கும் குடும்பங்களைக் கண்டறிய நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தமையால் குடும்பங்களை விட்டுப் பிரிந்தவர்களைக் கண்டறிவதற்கான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு சமூக சேவைகள் மற்றும் சமூகநலன்புரித்துறை அமைச்சரும், வடபகுதிக்கான விசேட செயலணிக் குழுத் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து குடும்பங்களின் உறுப்பினர்கள் வவுனியாவுக்கு வந்தபோதும், சிலர் பாதுகாப்புப் பிரதேசங்களில் தங்கியுள்ளனர். இவ்வாறு குடும்பங்களைவிட்டுப் பிரிந்திருப்பவர்களைக் கண்டறியும் நோக்கிலேயே செயற்திட்டமொன்றை அமைச்சர் முன்னெடுக்கவுள்ளார்.
தற்பொழுது வவுனியா சென்று அங்கு தங்கியிருந்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களைப் பார்வையிட்டுவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களை நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியேற அனுமதிப்பதற்கும், ஊனமுற்றவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் நலன்புரி நிலையங்களுக்கு வெளியே தங்க அனுமதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வவுனியா சென்றிருக்கும் அமைச்சர், கதிர்காமர் கிராமம் மற்றும் பம்மைமடு நலன்புரி நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நலன்புரி நிலையங்களில் அதிகரித்திருக்கும் வெப்ப சூழ்நிலை, காற்றோட்டமான ஜன்னல்கள், தங்கியிருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் சமையல் பொருள்கள் போன்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப் பொருள்களை வழங்க அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply