வடக்கில் மீள்குடியேற்றத்தை ஆராய ஒரு வாரத்துக்குள் அதிகாரிகள் மட்டத்திலான குழுவை அனுப்புகிறார் : மைத்திரி

maithiriவடக்கில் மீள்குடியேற்றத்துக்காக அதிகாரிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் காடழிப்பதற்கு கடந்த ஆட்சியின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் ஆராய்வதற்காக இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் வடக்குக்கு அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று அனுப்பிவைக்கப்படும் என்றும், அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பில் நடடிவக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கமத்தொழில், நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் கருத்து வெளியிட்டனர். அந்தவகையில், காடழிப்பை தடுத்து நிறுத்துவது சம்பந்தமாக இராணுவம், பொலிஸ், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர்கள் ஆகியோருடன் சில மாதங்களுக்கு முன்னர் நான் பேச்சு நடத்தினேன்.

குறிப்பாக காடழிப்பைத் தடுத்து நிறுத்துமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் அதிகாரிகளே ஏற்கவேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்திக் கூறியிருந்தேன். வனபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மீள்குடியேற்றத்துக்காக 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 22ஆம் திகதி வரையும் அதேபோல் 2014 ஆம் ஆண்டு செம்டெம்பர் 15ஆம் திகதியும் காணிகள் பெறப்பட்டுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டும் அரசியல் காரணங்களுக்காக இந்தக் காணிகள் வழங்கப்பட்டன என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மன்னாரில் 2500 ஏக்கர், வவுனியாவில் 325 ஏக்கர், முல்லைதீவில் 325 ஏக்கர வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், கிளிநொச்சியிலும் காணிகள் இவ்வாறு பெறப்பட்டுள்ளன.

எனவே, மீள்குடியேற்றத்துக்காக காணிகள் பொறுப்பேற்கப்படடிருந்தாலும காடழிக்கப்பட்டிருந்தால் உடடியாக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வடக்கில் குறித்த பிரதேசங்களுக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் நேரில் அனுப்பிவைத்து நிலைமைகள் ஆராயப்படும். அதற்குப் போக்குவரத்து வசதிகளும் வழங்கப்படும். சபையில் காடழிப்பு பற்றி பேசிய இருதரப்பு எம்.பிக்களும் அதிகாரிகள் குழுவுடன் அங்கு நேரில் செல்ல முடியும்.

அதிகாரிகள் அங்கு நிலைமைகளை ஆராய்ந்தப் பின்னர் ஒரிரு வாரத்துக்கள் அறிக்கை பெறப்பட்டு மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டவிரோத காடழிப்பு, மண், கல் அகழ்வுக்கு எதிராக பாராபட்சமின்றி சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், இரத்தினக்கல் அகழ்வுக்குரிய அனுமதிப்பத்திரம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படாது. ஜனாதிபதித் தேர்தலின்போதும் நான் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தேன் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply