வெள்ள நிவாரணப் பணிகளில் அரசியல் கூடாது: புதுச்சேரியில் ராகுல் காந்தி பேட்டி

ragulதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நேரத்தில் அரசியல் நடத்தாமல் மக்களுக்கு நிவாரணப் பணிகளை செய்ய வேண்டியது முக்கியம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரி வந்தடைந்தார். லாஸ்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் அருகே அவரை புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் மத்திய மந்திரி வி.நாராயணசாமி, புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வி. வைத்தியலிங்கம், புதுவை-தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட ராகுல் காந்தி, ரோடியர்பேட்டை, ஷண்முகா நகர், ஈச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, சேத நிலவரங்களை பார்வையிடுவதற்காகவே நான் வந்துள்ளேன். இந்த நேரத்தில் அரசியல் நடத்தாமல் நம்மால் இயன்றவரை புதுவை மற்றும் தமிழக மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை செய்ய வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்டார்.

பின்னர், கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களை பார்வையிடுவதற்காக புதுச்சேரியில் இருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply