ராசிபுரம் கல்லூரியில் படித்த வெளிநாட்டு மந்திரி மகள் கடத்தல்: கொல்கத்தாவில் போலீசார் மீட்டனர்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டோ நாட்டைச் சேர்ந்த மந்திரி ஒருவரின் மகள் மேரி கிரேஸ் (வயது 18). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றம் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி 2–ம் ஆண்டு படித்து வந்தார். ராசிபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டி விரிவு பகுதி–2ல் நடுத்தெருவில் உள்ள பிரபுதாஸ் என்பவர் வீட்டில் கடந்த ஒரு வருடமாக தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
இவருக்கு 3–வது செமஸ்டர் தேர்வு கடந்த 1–ந் தேதி முடிந்து விட்டது. 8–ந்தேதி வரை விடுமுறை ஆகும். இவர் 5–ந்தேதி வரை ராசிபுரத்தில் இருந்தார். 6–ந்தேதி அவர் திடீரென்று மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்ற தகவலும் இல்லை. அவர் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியாகி இருக்கலாம் என்றும் கருதப்பட்டது.
ஆனால் ருவாண்டோ நாட்டில் உள்ள அவரது பெற்றோருக்கு சிலர் போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் டெல்லியில் உள்ள ருவாண்டோ நாட்டு தூதகர அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ருவாண்டோ நாட்டு தூதரக அதிகாரி எமிலி இதுகுறித்து டெல்லியில் உள்ள கவுஸ் ககாஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
டெல்லி போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேற்கு மண்டல ஐ.ஜி.சங்கர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் தலைமையில், ராசிபுரம் டி.எஸ்.பி ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் ராஜாரண வீரன் (ராசிபுரம்) பாலமுருகன் (நாமகிரிப்பேட்டை) உள்ளிட்ட போலீசார் இடம்பெற்று இருந்தனர்.
இந்த நிலையில் தமிழக போலீசார் மாணவியின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் அவர் பெங்களூர் வழியாக கொல்கத்தா சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து மாணவிக்கு வந்த செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்து டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டெல்லி போலீசார் மாணவி மேரி கிரேசை கொல்கத்தாவில் மீட்டனர். அவரை கடத்தி சென்ற ருவாண்டோ நாட்டு கும்பலையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மாணவி மீட்கப்பட்டது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
மாணவி சொந்த நாட்டுக்கு செல்வதாக கல்லூரியில் கூறி விட்டு சென்றார். 6–ந்தேதி முதல் அவரை காணவில்லை. சொந்த நாட்டுக்கும் வரவில்லை. இதனால் அவரது தந்தையான ருவாண்டோ நாட்டு மந்திரி இது குறித்து ராசிபுரத்தில் உள்ள கல்லூரியிலும், அவர் தங்கி இருந்த வீட்டிலும் விசாரித்த பிறகு அவரை காணவில்லை என்பதால் டெல்லியில் புகார் கொடுத்து தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
டெல்லியில் உள்ள தூதரக அதிகாரி இது குறித்து புகார் கொடுத்ததன் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர். மாணவிக்கு வந்த செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்தனர். விசாரணையில் மாணவிக்கு இண்டர் நெட் மூலமாக அவர்களது நாட்டை சேர்ந்த மாணவர்கள் இலவசமாக படிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கொல்கத்தாவுக்கு வரவழைத்து உள்ளனர். பின்னர் அவரை கடத்தி வைத்துக் கொண்டு 3 லட்சம் டாலர் கேட்டு மிரட்டி உள்ளனர். டெல்லி போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு மாணவியை மீட்டு குற்றவாளிகளை கைது செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினர்.
மீட்கப்பட்ட மாணவியுடன் டெல்லி போலீசார் இன்று ராசிபுரம் வர உள்ளதாக கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply