வங்காள தேசத்தில் இந்து பக்தர்கள் மீது குண்டுவீச்சு – துப்பாக்கிச்சூடு: 2 பேர் படுகாயம்

bangaவங்காளதேசத்தில், தினஜ்பூர் மாவட்டம், பாஹுச்சி கிராமத்தில் இஸ்கான் இந்துக் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் பங்கேற்ற ஆன்மிக மாநாடு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அடையாளம் தெரியாத 5 நபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்று, கூட்டத்தினர் மீது குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பக்தர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் ஓடினர். இருப்பினும் இந்த தாக்குதலில் மிதுன் சந்திர ராய் (வயது 27), ரொனோஜித் சந்திரராய் (45) ஆகிய 2 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, தினஜ்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் பங்கேற்ற சபாயத் உசேன் என்பவரை கோவிலில் கூடி இருந்தவர்கள் சுற்றிவளைத்து பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். மற்றொருவரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 30-ந் தேதி இதே தினஜ்பூர், ராணிபந்தர் கிராமத்தில் இஸ்கோன் கோவில் பூசாரி வீரேந்திரநாத் என்பவர் சுடப்பட்டார். கடந்த மாதம் 18-ந் தேதி தினஜ்பூர் மிர்சாப்பூர் பகுதியில் இத்தாலி டாக்டர் ஒருவரும், கோவில் பூசாரி ஒருவரும் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தினஜ்பூர் பகுதியில் தொடர்ந்து இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply