நிலத்தை வெற்றி கொள்வது போல் தமிழ் மக்களின் மனங்களையும் வெல்ல வேண்டும் : அமைச்சர் டலஸ்

நிலப் பிரதேசத்தை வெற்றிகொள்வது போன்றே தமிழ் மக்களின் மனங்களையும் வெற்றி கொள்ள வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். அதற்காகவே இருபது வருடங்களுக்குப் பின் வடக்கிற்கு “யாழ்தேவி” யை அனுப்புவதற்கான மகத்தான திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்கு அனைவரது ஒத்துழைப்பு மிக அவசியமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

‘யாழ்தேவி’ ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கருத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுறையில் மேலும் தெரிவித்ததாவது;

1990 ஜூன் 13ம் திகதி நிறுத்தப்பட்ட யாழ்தேவி ரயில் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ்தேவி மூலம் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படுவது புலிகளால் சிதைக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் கெளரவமே என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

யாழ்தேவியை மீண்டும் சேவையிலீடுபடுத்த வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான 159 கிலோ மீற்றருக்கு ரயில் பாதை நிர்மாணிக்கப்படவேண்டியுள்ளது. 85 பாலங்களும் 58 மதகுகளும் 28 ரயில் நிலையங்களையும் நிர்மாணித்து யாழ்தேவி சேவையை விரைவுபடுத்துவது என்பது இலேசான காரியமல்ல.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அகராதியில் முடியாது என்பதற்கே இடமில்லை. இதற்கமைய ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்புடனான சேவைமூலம் இந்த சவாலை வெற்றி கொள்ள முடியுமென நம்புகிறேன்.

குறிப்பாக வவுனியாவிற்கும் காங்கேசன்துறைக்கு மிடையிலான 159 கிலோ மீற்றர் ரயில் பாதையை அமைப்பதற்கு 450 கோடி ரூபாவும் அதற்கான சிலிப்பர் கட்டைகளுக்கு 250 கோடி ரூபாவும் தேவைப்படுகிறது. இதைவிட ரயில் நிலையங்கள், பாலங்கள், மதகுகள் அமைப்பதற்கும் பெருந்தொகை நிதி அவசியமாகிறது.

யாழ்தேவி சேவைக்கான கருத்திட்டம் “தெற்கின் தோழன்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்படுவதுடன் அதற்கான இணையத்தளமொன்றும் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்திட்டத்துக்கான செயலகம் ஒன்று ஓரிரு தினங்களுக்குள் கொழும்பில் திறக்கப்படவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மகத்தான வேலைத் திட்டத்தில் இணைந்து ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வருமாறு சகல இன மத மக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply