அரசியலில் வங்குரோத்து அடைந்தோர் ஆட்சி கவிழும் எனக் கனவு காண்கின்றனர் : ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

maithri-4என்று ஆட்சி கவிழும் எப்போது எனது கதை முடியும் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருப்பவர்கள் எந்தளவு வங்குரோத்து நிலையில் உள்ளனர் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்வர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர்களுக்கு தமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி இந்த அரசாங்கம் ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருக்கும் என்றும் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார். மின்சார சபை ஊழியர்களுக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை சில மாதங்களிலேயே நிறைவேற்றமுடிந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி நாட்டில் முழுமையான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

 

மின்சார சபையின் தற்காலிக ஊழிியர்கள் 2433 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்ற போது அங்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

 

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்கின்ற நிறுவனமாக இலங்கை மின்சார சபை விளங்குகின்றது.

 

கடந்த ஒரு வருடத்திற்கு முன் தேர்தல் காலத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் நளின் பண்டார எம்.பி.யும் மின்சார சபை தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் என்னிடம் தெரிவித்தனர். நானும் அவர்களது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன்.

 

அவர்களுக்கு நான் அளித்த வாக்குறுதியை ஒரு வருட காலத்திற்குள் நிறைவேற்ற முடிந்துள்ளது.

 

எமது நாட்டின் தேர்தல் வாக்குறுதிகள் சம்பந்தமாக நோக்கும் போது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது நிறைவேற்றப்படாதது தொடர்பில் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் இதில் ஒவ்வொரு விதமாக செயற்பட்டுள்ளன.

 

எமது புதிய அரசாங்கத்துக்கு இன்னும் ஒருவருடம் கூட பூர்த்தியடையாத நிலையில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

 

எமது அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் இந்த அரசாங்கம் விரைவில் வீழ்ச்சிகாணும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

 

சிலர் இந்த அரசாங்கம் எப்படி விழப்போகிறது என்பது பற்றிய கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். தோல்வியடைந்த சிலர் எனது வீழ்ச்சி பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். நான் எப்போது மரணிக்கப் போகின்றேன் என்றெல்லாம் ஆரூடம் கூறுகின்றனர். அந்தளவு வங்குரோத்து நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளமை தெரிகிறது. அரசியல் ரீதியாக அவர்கள் எந்தளவு மோசமான சிந்தனையில் உள்ளனர் என்பது புரிகிறது.

 

இந்த வருடத்தின் ஜனவரி 8 ஆம் திகதி தான் நான் ஜனாதிபதியாகப் பதவியேற்றேன். 100 நாள் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். பாராளுமன்றத்தில் போதிய பலம் இல்லாத நிலையில் 19வது திருத்தத்தை 3ல் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளோம்.

 

எமது நாட்டில் மட்டுமல்ல உலகின் ஜனநாயக நாடுகளைப் பொறுத்தவரை எமது நாட்டுக்கு இந்த விடயத்தில் ஒரு சிறப்பு உள்ளது.

 

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது அவரது ஐ. தே. க.வுக்கு பாராளுமன்றத்தில் 47 ஆசனங்களே இருந்தன. எனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 142 ஆசனங்கள் இருந்தன. இந்நிலையிலேயே இரு பிரதான கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி 100 நாள் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது.

 

19வது திருத்தத்தின் மூலம் ஜனநாயக சுதந்திரத்தை உறுதிப்படுத்தினோம். சுயாதீன குழுக்களை அமைத்து நாட்டின் அரச துறையை சுயாதீனப்படுத்தியுள்ளோம் பொலிஸ், நீதிமன்றம் மனித உரிமை என்பன சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ஒரு வருட குறுகிய காலத்தில் மக்களைத் திருப்திப்படுத்தும் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றிய அரசாங்கம் இருக்க முடியாது. அது முடியாத காரியம் எனினும் எமது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் மக்களுக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும். அதற்கான நடவடிக்கைகளையே நாம் மேற்கொண்டுள்ளோம்.

 

மின்சார சபை ஊழியர்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிக்கிணங்க சுமார் 2500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி நாம் வாக்குதியை நிறைவேற்றியுள்ளோம். இதேபோன்று எமது தேர்தல் வாக்குறுதிகளை நாம் தொடர்ந்தும் நிறைவேற்றுவோம் என்பது உறுதி.

 

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று மூன்று மாதமே கடந்துள்ளன எனினும் சில சக்திகள் இதனை பல்லாண்டு ஆட்சிசெய்த அரசாங்கமாக எண்ணியே கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

 

அவர்கள் நினைப்பது போலன்றி நாம் நவீன உலகம் நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு புதிய சமூகம் புதிய சந்ததி பற்றி சிந்தித்தே செயற்படுகிறோம். உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் போன்று எமது தாய்நாட்டையும் உலகின் சிறந்த சாதனை படைக்கும் நாடாக கட்டியெழுப்புவதே எமது நோக்கம்.

 

இதற்காக இந்த யுகத்தில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளன. குறிப்பாக மின் சக்தியைப் பொறுத்தவரை நாட்டிற்கும் மக்களுக்கும் மிக முக்கியமான வளம் அது.

 

குறுகிய காலத்தில் முழுநாட்டிற்கும் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய உட்பட துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் அனைவருமே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply