சீனாவில் காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை எட்டியது: இரண்டாவது முறையாக சிகப்பு எச்சரிக்கை
மக்கள்தொகையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் நாளுக்குநாள் சுற்றுச்சூழலும், காற்றும் மாசடைவது அதிகரித்துக் கொண்டே வருகின்றது.குறிப்பாக, 2.2 கோடி மக்கள் வாழ்ந்துவரும் தலைநகர் பீஜிங்கில் வாகனங்களாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்று சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிவருகின்றது. தற்போது அங்கு உறைபனி பெய்துவரும் நிலையில் காற்றில் கலக்கும் மாசுக்கள், வேகமாக பரவாமல் ஒரே இடத்தில் சூழ்ந்து உறைந்துள்ளது. போதாதகுறைக்கு குளிருக்கு கதகதப்பூட்டிக் கொள்ளும் வகையில் இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் நிலக்கரியை எரித்து மூட்டம் போடுவதால் அதிலிருந்தும் அதிகப்படியான புகை வெளியேறுகின்றது.
ஆரோக்கியமான வாழ்வுக்கு காற்றில் மாசின் அளவு 200 அலகுகளை மிகாமல் இருக்க வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் மடிப்பீடாக உள்ள நிலையில் கடந்த எட்டாம் தேதி பீஜிங்கில் 256 அலகுகளாக இருந்த மாசின் அளவு படிப்படியாக உயர்ந்து, 365 அலகுகளாக உயர்ந்துள்ளது. இது 2.5 மைக்ரான் அடர்த்திக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது. 300 அலகுகளை தாண்டிய காற்று மாசின் அளவு சுவாசிக்க தகுதி அற்றதாகவும், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பேராபத்து நிறைந்ததாகவும் கருதப்படுகின்றது.
இந்நிலையில், இன்று பீஜிங் நகர காற்றில் உறைந்துள்ள மாசின் அளவு 365 அலகுகளை எட்டியுள்ளதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த அளவு 500 அலகுகளை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதானால், கார்கள் இயக்குவதை கைவிட்டு பஸ் உள்ளிட்ட பொது வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகளுக்கு சொந்தமான 30 சதவீதம் கார்களும் ஓடவில்லை. இதனால், நகரின் முக்கிய சாலைகளில் பாதிக்கும் குறைவான கார்கள் மட்டுமே ஓடுவதை காண முடிந்தது. இன்னும் ஒருவாரம்வரை இந்த அதிகப்படியான காற்றுமாசு நீடிக்கும் என்பதால், எட்டாயிரத்துக்கும் அதிகமான பேட்டரி பஸ்கள் உள்பட 20 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்களை மட்டும் இயக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பனிப்பொழிவும் ஒருபக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் நாளை முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை தலைநகர் பீஜிங் மற்றும் அதன் அண்டை மாகாணமான க்சியான் வரை மூச்சை திண்றடிக்கும் அளவு உறைபனியுடன் கூடிய மாசினால் பேராபத்து நேரலாம் என அந்நாட்டின் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நாட்களில் ஒருகிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் சாலையில் உள்ள பொருட்களை பார்க்க முடியாது. அதனால், மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லாமல், வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இந்த ஆண்டு மாசு தொடர்பான சிகப்பு எச்சரிக்கை விடப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply