பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை
ஜெனீவா தீர்மானத்திற்கு அமைவாக பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலம் நீக்கப்பட்டு அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள தேசப்பற்றுச் சட்டம் போன்றதொரு சட்டத்தை உருவாக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.1977ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டதுடன் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நியாயப்படுத்தி பேசிய பலர் கைது செய்யப்பட்டதுடன் தமிழ் மக்களின் பேச்சு சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் பறிக்கப்பட்டிருந்தது.
2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் அழிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த சட்டமூலத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த சட்டமூலத்தை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் பதிலாக உருவாக்கப்படவுள்ள தேசப்பற்றுச் சட்டமூலம் சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களை பாதிகக்காத வகையில் அமைய வேண்டும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply