புதிய அரசியல் யாப்பு : அமெரிக்கா, இந்தியா அரசிற்கு அழுத்தம்
புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தற்போது பேசப்படுகின்றது. ஆனால் இனப்பிரச்சினை தீர்வு அது குறித்த பேச்சுக்கள் என்று எதுவுமே இல்லாமல் புதிய அரசியல் யாப்பு பற்றிய செய்திகள் உலாவுகின்றன. அதுவும் இந்திய மத்திய அரசின் அனுமதியுடன் அல்லது இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானம் எடுப்பவர்கள் என பலரும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு விடயத்தில் தீவிரமாக ஈடுபடுவதாக அறியமுடிகின்றது.
ஆனால் 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை சந்தித்த தமிழச் சமூகத்துடன் புதிய யாப்பு தொடர்பாக பேசப்பட்டதா அல்லது அவர்களின் யோசனைகள் பெறப்பட்டதா என்பது சந்தேகமே. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் யாராவது புதிய யாப்பு உருவாக்க விடயத்தில் பங்கு கொண்டார்களா அல்லது அவர்களிடம் யோசனைகள் பெறப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் தலைவர் சம்பந்தனின் யோசனைக்கு அமைவாக புதிய அரசியல் யாப்பு விவகாரத்தில் பங்கு கொண்டார் அல்லது யோசனை வழங்கினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் சம்பந்தன் விளக்கமளித்திருக்கிறார். அதாவது புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட விடயங்களும் உள்ளடங்க வேண்டும் என்று அமெரிக்காவும், இந்தியாவும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் எதிர்வரும் தை மாதம் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய யாப்பு தொடர்பாக பேசப்படும் என்றும் சம்பந்தன் கூறியிருக்கின்றார்.
ஆனால் புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாட்டு முயற்சிகளில் சுமந்திரன் ஈடுபடுவது அல்லது ஈடுபடப்போவது குறித்த எந்த ஒரு தகவல்களையும் சம்பந்தன் அந்த கூட்டத்தில் வெளியிடவில்லை என மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். அதேவேளை இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஜெனீவா தீர்மானத்தின்படி பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்துடன் அரசாங்கம் பேச வேண்டும் என்று சம்பந்தன் அரசாங்கத்திடம் ஏன் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது என்றால் முதலில் தமிழ்மக்களுடன் பேச வேண்டும். வடக்கு இணைப்பு மற்றும் அதிகாரப் பங்கீடுகள் தொடர்பாக பேசி முடிவு எடுக்க வேண்டும். பின்னர் புதிய அரசியல் யாப்பில் அந்த முடிவுகளை இணைக்க வேண்டும். அப்போதுதான் புதிய அரசியல் யாப்பு செல்லுபடியாகும். ஆனால் அவ்வாறான எந்தவொரு பேச்சையும் அரசாங்கம் தமிழ் மக்கள் சார்பாக கூட்டமைப்புடன் பேசவில்லை என்று குற்றம் சுமத்திய சுரேஸ் பிரேமச்சந்திரன் கொழும்பு அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கின்றது என்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் சார்பாக பேச முடியாது எனவும சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் கூட புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளை முன்வைக்க முடியாது என மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது சம்பந்தன் கூறியிருந்தார். இப்போது நாடாளுமன்றத்தையே அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் சம்பந்தன் எவ்வாறு கேட்க முடியும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகவே, புதிய அரசியல் யாப்பு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் சரியான இணக்கப்பாடுகள் அல்லது கொள்கைத் தீர்மானங்கள் இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக பேசுவது என்றால் முதலில் தமிழ் மக்களுடன் பேசி அவர்களின் 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கூறியிருக்கின்றார்.
எனவே, தமிழ் மக்களை புறக்கணிக்கின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் தீர்மானங்களை சம்பந்தனும் சுமந்திரனும் தன்னிச்சையாக ஏற்பது என்பது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த முடிவு அல்ல. இவர்களின் நடவடிக்கைகளை கண்டிக்காமல் அல்லது தமிழ் மக்களை புறந்தள்ளி புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுவது எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல என்ற விழிப்புணர்வுகளை கூட்டமைப்பின் ஏனயை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை என்ற சந்தேகங்களும் எழுகின்றன. எதிர்வரும் 22 ஆம் திகதி புதிய அரசியல் யாப்பு தொடர்பாக கொழும்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply