அரசாங்கத்துடன் கள்ளத்தனமாக ஜே.வி.பி. இணைந்துள்ளது : சோமவன்ச
மத்தியில் அமைந்துள்ள கூட்டு அரசாங்கத்தில் மக்கள் விடுதலை முன்னணி நேரடியாக இணையாவிட்டாலும் கள்ளத்தனமாக இணைந்துகொண்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் மக்கள் சேவை கட்சியின் தலைவருமான சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
தற்போதைய அரசாங்கத்துடன் மறைமுக தொடர்புகளை வைத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி வெளியில் அரசாங்கத்துக்கு எதிரான கட்சி என இனம் காட்டும் வகையில் அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணி செல்கிறது.
மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து வெளியேறி மக்கள் சேவைக் கட்சியை எதற்காக ஆரம்பித்தீர்கள் என அதிகமானவர்கள் என்னிடம் கேட்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணி இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டதாகும். 49ஆவது வருடம் கழிந்து சென்றுகொண்டிருக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி தடம்மாறியது. அதன் பயணப் பாதை பிழையாக மாறியது. அதனால்தான் கட்சியில் தொடர்ந்து இருக்காமல் வெளியேறிவிட்டேன். அவ்வாறு இல்லையென்றால் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற சகல விடயங்களுக்கும் நானும் பொறுப்புக் கூறவேண்டி வந்திருக்கும்.
ரோஹண விஜேவீர மக்கள் விடுதலை முன்னணியை பொது மக்களின் கட்சியாகவே கட்டியெழுப்பினார். என்றாலும் தற்போதைய தலைவர் அதனை மறந்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைவர்கள் கறுப்பு சந்தையின் கையாட்களாகியுள்ளனர். அவர்களின் தேவைக்கேற்ப செயற்படும் பிரிவினர்களாகியுள்ளனர். அதனால்தான் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் விடுதல முன்னணிக்கு மக்கள் வாக்களிக்காமல் நிராகரித்தனர்.
மேலும், இம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் கூட்டு அரசாங்கமொன்று உருவானது. ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து அமைத்த இந்த கூட்டு அரசாங்கத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிப்படையாக இணையாவிட்டாலும் கள்ளத்தனமாக கூட்டுச் சேர்ந்துள்ளன. அனுரகுமாரவுக்கு அதனை பொய் என்று சொல்ல முடியாது.
இவர்கள் பாராளுமன்றத்திற்குள் செயல்படும் விதத்தில் அல்ல மறைமுகமாக இணைந்தே செயல்படுகின்றனர். வெளியில் அரச எதிர்பு கட்சி போன்று அரசாங்கத்துக்கு எதிராக பேரணிகளை நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இப்போது இந்த நாட்டை நிர்வகிப்பது கூட்டு அரசாங்கமல்ல. குழப்ப அரசாங்க மாகும். இந்த அரசில் குழப்பம் இல்லாத இடமில்லை.
அரசாங்கம் முழு நாட்டையும் குழப்பி வருகின்றது. தற்போது இந்த நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை என்பதே உண் மையான நிலைமையாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply