ஜனவரி மாதம் 9ஆம் திகதி விசேட அறிவிப்பொன்று விடப்படவுள்ளது : ஜனாதிபதி மைத்திரிபால
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து, ஒருவருட நிறைவைக் கொண்டாடும், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியன்று, விசேட அறிவிப்பொன்று விடப்படவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. புத்தாண்டின் கன்னியமர்வு 8ஆம் திகதி ஆரம்பமாவதுடன், மறுநாள் சனிக்கிழமையும் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் யோசனையொன்று முன்வைக்கப்படவுள்ளது. அந்தயோசனை தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் பின்னரே முடிவெடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த அறிவிப்பின் போது புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதற்காக நாடாளுமன்றத்தை சட்டவாக்க மன்றமாக மாற்றுவதற்கான யோசனையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதன்போது முன்வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் குழுவொன்றை நியமித்துள்ளதுடன், அதன் அறிக்கையை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் கோரியிருந்தார். இதேவேளை, புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவும் அங்கிகாரம் அளித்துள்ளதுடன், யோசனைகளை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் முன்வைப்பதற்கும் திகதி குறித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கட்சியின் யாப்பு மாற்றத்துடன் ஜனவரியில் ஐக்கிய தேசியக் கட்சியில் பதவிமாற்றங்கள் ஏற்படுமென அதன் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், நேற்று(22) தெரிவித்தார். ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது, புதிய செயலாளர் கூட வரலாம் என்றார். அதாவது, தனது பொதுச் செயலாளர் பதவி தொடர்ந்து இருக்குமெனக் கூறமுடியாது என்றார். சில பதவியாளர்களின் அதிகாரம் குறைக்கப்படும் அல்லது திருத்தப்படும் என அவர் கூறினார். அண்மைக்காலத்தில், கட்சியில் ஏற்பட்ட நிலைமைகளில் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. அவை குறைக்கப்படலாம் எனவும் அவர் கூறினார். பிரதித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply