வாஷிங்டன் நகரில் உள்ள பாலஸ்தீன விடுதலை இயக்க அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட அமெரிக்க அரசு மறுப்பு

plaஅண்டை நாடான இஸ்ரேலை அழித்தொழித்து ஜோர்தான் ஆற்றுக்கும் மத்தியதரைக்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் பாலஸ்தீனம் என்ற சுயாட்சி உரிமை கொண்ட பெரிய நாட்டை உருவாக்கும் நோக்கத்தில் 1964-ம் ஆண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கம் உருவாக்கப்பட்டது. ஆயுதப்போராட்டத்தின் மூலம் தங்களது தாய்மண்ணின் மீதான உரிமையை நிலைநாட்டும் இந்தப் போர், பின்னர் ஐ.நா.சபையின் சமரசத்துக்கு பின்னர் சற்று தணிந்தது. தற்போது இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தனித்தனி அண்டை நாடுகளாக செயல்பட்டு வருகின்றன.

எனினும், பரந்து விரிந்த பாலஸ்தீனம் என்ற கொள்கையை பாலஸ்தீனியர்கள் இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். இதன் விளைவாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் இயக்கத்தினர் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு காஸா பகுதியின்மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிவதும் வாடிக்கையாகி விட்டது. நீறுபூத்த நெருப்பாக இந்தப் பிரச்சனை நீடித்துக் கொண்டே வருகின்றது.

ஆரம்பகாலத்தில், பாலஸ்தீன விடுதலைப் போருக்கு ஆதரவை திரட்டும் வகையில் உலகின் பல நாடுகளில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பெயரால் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இங்கிருந்தபடியே உள்நாட்டு தலைவர்களின் ஆதரவை பாலஸ்தீனியர்கள் திரட்டி வந்தனர். இவ்வகையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகம் அமைக்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகின்றது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டினர் மீது பாலஸ்தீனியர்கள் சமீபகாலமாக தாக்குதல்களை அதிகரித்துள்ளதால் வாஷிங்டன் நகரில் இயங்கிவரும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட வேண்டும் என இஸ்ரேலுக்கு ஆதரவான கிறிஸ்துவ அமைப்புகள் குரல் எழுப்பின.

அதை ஆதரிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசுக்கட்சி தலைவர் டெட் குருஸ் உள்பட 32 எம்.பி.க்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

வாஷிங்டனில் இயங்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தால் அமெரிக்காவுக்கு எந்த பலனுமில்லை. பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிக்கும் எவ்வித பலனுமில்லை. எனவே, இனியும் அந்த அலுவலகம் இங்கு இயங்குவதை அனுமதிக்க கூடாது என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனால், அந்த கோரிக்கையை அமெரிக்க அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் எலிசபத் ட்ருடியூ, ‘கடந்த 1994-ம் ஆண்டில் இருந்து அமைந்த ஒவ்வொரு அரசும் வாஷிங்டனில் உள்ள பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தை மூடும் விவகாரத்தில் சலுகை அளித்து வந்துள்ளன.

அந்த இயக்கத்துக்கு உரிய தனி இடம் உண்டு என்றே நாம் கருதுகிறோம். எனவே, அலுவலகத்தை மூடும் முடிவை இந்த அரசு எதிர்க்கும். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தை மூடுவதால் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிக்கு பாதகமான பலன்களே ஏற்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply