பாகிஸ்தானில் ஒரே நாளில் 4 தீவிரவாதிகளுக்கு தூக்கு
பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி நடத்திய கொடூர தாக்குதல்களில் குழந்தைகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட 144 பேர் கொல்லப்பட்டனர்.உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொடிய சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
அத்துடன், தீவிரவாதிகள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க ஏதுவாக ராணுவ கோர்ட்டுகள் அமைக்கப்பட்டன. இதற்காக அந்த நாட்டின் அரசியல் சட்டத்திலும், ராணுவ சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.ஆனால் இந்த ராணுவ கோர்ட்டுகளுக்கு எதிராக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான 17 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. 11-க்கு 6 என்ற அளவில், மெஜாரிட்டி நீதிபதிகள் ராணுவ கோர்ட்டுகள் அமைத்தது செல்லும் என தீர்ப்பு அளித்தனர்.
இதேபோன்று, அரசியல் சட்ட திருத்தத்தை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், 14-க்கு 3 என்ற அளவில் மெஜாரிட்டி நீதிபதிகள் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என தீர்ப்பு வழங்கினர்.
இந்த நிலையில் அங்கு தற்கொலைப்படை தாக்குதல், பணத்துக்காக ஆட்களை கடத்துதல், தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து ராணுவ கோர்ட்டுகள் தீர்ப்பு வழங்கின.அந்த தீவிரவாதிகள் நூர் சயீத் என்ற ஹபீஸ் சாகிப், முராத் கான், இனயதுல்லா, இஸ்ராருதீன் என்ற அபு லாயிஸ் ஆவார்கள்.
இவர்களை தூக்கில் போட்டு தண்டனையை நிறைவேற்றுவதற்கு ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து இந்த 4 பேரும் அங்கு கைபர் பக்துங்குவா மாகாணத்தில் உள்ள கொஹாட் சிறையில் நேற்று தூக்கில் போடப்பட்டனர்.இங்குள்ள மற்றொரு சிறையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூட தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் தூக்கில் போடப்பட்டது நினைவுகூரத்தக்கது.
பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்ட இந்த ஓராண்டு காலத்தில் இதுவரை 310-க்கும் மேற்பட்டோர் தூக்கில் போடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply