பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் இருவர் வீரமரணம்
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; படையினர் இருவர் வீரமரணம் அடைந்தனர்.பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது பதன்கோட் விமானப் படைத்தளம். இங்கு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் உடையில் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனையடுத்து, பாதுகாப்புப்படை வீரர்கள் முழுவீச்சில் தீவிரவாதிகள் மீது அதிரடித் தாக்குதலில் இறங்கினர்.
இது குறித்து பஞ்சாப்பின் சட்டம் ஒழுங்குப் பிரிவு போலீஸார் எச்.எஸ். ஹில்டன் கூறும்போது, “இரு தரப்பினருக்கும் இடையேயான சண்டை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. தீவிரவாதிகள் அதிக அளவிலான ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்களை தங்கள் வசம் வைத்திருந்தனர். விமானப் படைத்தளத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதி வழியாக அவர்கள் இங்கு ஊடுருவினர்” என்றார்.
இந்தக் கடும் சண்டையின் முடிவில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்கே பாக்ஷி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பாதுகாப்புப் படையினர் இருவர் வீரமரணம் அடைந்ததாகவும் மற்றும் 6 வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமானப் படைத்தளத்தை குறிவைத்தது யார்?
விமானப் படைதளத்தை குறிவைத்தவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை மாநிலமான ஹரியாணாவிலும் இரண்டுக்கும் பொதுவான தலைநகராக திகழும் சண்டிகரிலும் பலத்த தீவிர சோதனை நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமானப் படைத்தளம் சுற்றிலும் ரோந்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தளத்தின் தொழில்நுட்ப மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாபில் கடந்த 6 மாதத்தில் நடந்துள்ள இரண்டாவது மோசமான தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த ஜூலை 27-ம் தேதி பஞ்சாப்பின் குருதாஸ்பூரின் தினான்நகரில் 3 தீவிரவாதிகள் ராணுவ உடையில் நுழைந்து தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.
என்ன சொல்கிறார் ராஜ்நாத்?
இதனிடையே, தீவிரவாதத் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்காக அங்கிருந்து வரும் அனைத்து தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்காமல் இருக்க மாட்டோம். நம் படையினர் மிகச் சிறப்பாக பதில் தாக்குதல் நடத்தினர்” என்றார்.
மோடியின் பாக். பயணத்துக்கான பதில்: ஒமர் அப்துல்லா
இந்தத் தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முத்ல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “எனது முந்தைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன். தீவிரவாதிகள் விமானப் படைதளத்தை குறிவைத்து தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மட்டுமே ஊடுருவி இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி மேற்கொண்ட தைரியமான ‘திடீர்’ பாகிஸ்தான் பயணத்துக்கான உடனடி பதில்தான் இது. அவர் சந்தித்திருக்கும் முதல் சவால்தான் இந்தத் தாக்குதல்.
தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றோடு ஒன்றாக வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்பதனை பாஜக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். தாக்குதல்களுக்கு நடுவே இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply