பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒபாமா உதவுவார்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவுசெய்யப்பட்டாலும் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றம் ஏற்படாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதாகவும், இலங்கை இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படவேண்டுமென்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருக்கும் அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.
“இந்தக் கட்சி ஆட்சியில் உள்ளது என்பது பற்றிக் கவலையில்லை. இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையில் பாரிய மாற்றம் ஏற்படாது. தற்பொழுது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மோதல்கள் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படுவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவி வழங்கும்” என பிளேக் தெரிவித்தார்.
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவுசெய்யப்பட்டிருப்பது அமெரிக்காவின் அரசியலில் பாரிய மாற்றமொன்றை ஏற்படுத்தும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம அந்த ஊடகத்திடம் கூறினார்.
ஒபாமாவின் உண்மையான தலைமைத்துவத் திறமை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆளுமை என்பன புதியதொரு உலகத்தை தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
“பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒபாமா உதவுவார் என நாங்கள் கருதுகின்றோம். அவருடைய வெற்றி எமக்கும் மாற்றமொன்றைக் கொண்டுவரும் என நினைக்கிறோம்” என்றார் அமைச்சர்.
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏற்படாது என தாமும் கருதுவதாக அந்த ஊடகத்திடம் தெரிவித்த அமைச்சர், ஒபாமாவின் தலைமைத்துவத்தில் இலங்கை தொடர்பான கொள்கை மேலும் பலப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, நேற்று புதன்கிழமை அமெரிக்கத் தூதுவர் ரெபேர்ட்.ஓ.பிளேக்கைத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனாதிபதியாக ஒபாமா தெரிவுசெய்யப்பட்டமைக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply